ரஷ்யாவில் பிளேக் உள்ளிட்ட கடுமையான தொற்றுநோய்கள் குறித்து ஆய்வு செய்யும் ஆய்வகத்தில் பணியாற்றிய இளம் பெண் உயிரிழந்ததற்கான காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சைபீரியாவில் உள்ள இர்குட்ஸ்க் பிளேக் தடுப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றிய 28 வயதான தர்யா ஷிபிலோவா, அக்டோபர் 2-ம் தேதி உயிரிழந்தார். கடுமையான நிமோனியா பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிமோனிக் பிளேக் என்பது நுரையீரலைப் பாதிக்கும் கடுமையான தொற்றுநோயாகும். இது பாதிக்கப்பட்டவரிடமிருந்து மற்றவர்களுக்கும் பரவக்கூடும். எனினும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். உயிரிழந்த பெண்ணுக்கு இந்த நோய் இருந்ததற்கான உறுதியான ஆதாரம் இதுவரை கிடைக்கவில்லை.ரஷ்ய சுகாதார அதிகாரிகள் 5,500-க்கும் மேற்பட்ட பரிசோதனைகளை மேற்கொண்டதாகவும், ஆபத்தான நோய்க்கிருமிகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்த பெண்ணுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகளிலும் ஆய்வு செய்யப்பட்ட ஆபத்தான நோய்க்கிருமிகள் கண்டறியப்படவில்லை. அவர்களிடம் நோய் அறிகுறிகளும் தென்படவில்லை என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தொற்று தொடர்ந்து பரவி வருவதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. அதேநேரத்தில், அந்தப் பெண்ணின் மரணத்துக்கான உண்மையான காரணம் தெரியாததால், முழுமையான மதிப்பீட்டை மேற்கொள்ள கூடுதல் மருத்துவ மற்றும் ஆய்வகத் தகவல்கள் தேவைப்படுகின்றன.
இந்த ஆய்வகத்தில் பணியாற்றிய மற்றொருவருக்கும் இதேபோன்ற பாதிப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல்களை ரஷ்யா மறுத்துள்ளது. தற்போதைய நிலையில், பிளேக் பாதிப்பு உறுதிப்படுத்தப்படவில்லை. மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியத் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.