தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர்த் தேவை மற்றும் விவசாயம், கால்நடைகளின் ஜீவாதாரமாக உள்ள முல்லை பெரியாறு அணை நீரைப் பயன்படுத்தி சுமார் 2 லட்சம் ஏக்கரில் விவசாயம் நடைபெற்று வருகிறது.
இந்தாண்டு கோடை மழை மற்றும் தென் மேற்கு பருவமழை சரிவர கை கொடுக்காத நிலையில், 152 அடி கொள்ளளவு கொண்ட முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 122 அடிக்கு மேல் உயரவில்லை.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழை கடந்த 15-ம் தேதி முதல் தொடங்கி பெய்து வருவதால் அணைக்கு வரும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
நேற்று முன்தினம் அணைக்கு 196 கன அடியாக இருந்த நீர் வரத்து, நேற்று விநாடிக்கு 1,030 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால், அணையின் நீர்மட்டம் 116.90 அடியாக உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அணையில் இருந்து 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 2,069 மில்லியன் கன அடியாக இருந்து வருகிறது.
இந்நிலையில் அணைப் பகுதியில் 3.4 மில்லி மீட்டரும், தேக்கடி பகுதியில் 9.8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது. இதனால், வைகை அணையை நம்பி இருக்கும் 5 மாவட்ட பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.