திண்டுக்கல்லில் நில வணிக தொழில் முனைவோர் நல சங்கத்தின் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு பின்னர் மாநிலத் தலைவர் கருணாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள இடைத்தரகர்கள் அரசுக்கு வருமானத்தை ஈட்டி கொடுக்கின்றோம். விற்பவரையும் வாங்குபவர்களையும் ஒருங்கிணைத்து செய்யக்கூடிய எங்களுக்கு எந்த விதமான பாதுகாப்பும் கிடையாது. உரிமையும் இல்லாமல் இருக்கிறது. முத்திரைத்தாள் பதியும் போது சாட்சியாக இடைத்தரகர்களை கொண்டு வந்து அவர்களது கையெழுத்து மற்றும் சீல் வைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேபோல, கமிஷன் பிரச்சினைகளின் இடர்பாடுகளை களைய வேண்டும். தங்களுக்கு என்று தனி வாரியம் அமைக்க வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். இடத்தை விற்பவர்கள் வாங்குபவர்களுக்கு இடையே உள்ள பிரச்சினைகளில் சங்கம் தலையிட்டு அதை தீர்க்க நடவடிக்கை எடுப்போம்.
இடத்தின் உரிமையாளரிடம் முன் பணம் கொடுத்து அந்த இடத்தை விற்பனை செய்து தருபவர் தான் இடைத்தரகர்கள். ஆனால் இடத்தின் உரிமையாளருக்கு தெரியாமல் அதிக விலைக்கு விற்பனை செய்பவர்களை எங்கள் சங்கம் அனுமதிக்காது. அது மிகப்பெரிய குற்றமாகும். இவ்வாறு அவர் கூறினார்.