Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

பயனாளிகளுக்கு நேரடியாக ரூ.50 லட்சம் கோடி - மோடி தகவல்

பயனாளிகளுக்கு நேரடியாக ரூ.50 லட்சம் கோடி - மோடி தகவல்

நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் ரூ.50 லட்சம் கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. மேலும், ரூ.5 லட்சம் கோடி தவறான கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பகிரவும் WhatsApp Facebook

புதுடெல்லியில் நடைபெற்ற 10-வது இந்திய மொபைல் காங்கிரஸை தொடங்கிவைத்து பிரதமர் மோடி பேசியதாவது:

இந்தியாவின் அனைத்து மாவட்டங்களையும் 5-ஜி இணைப்பு சென்றடைந்துள்ளது. 2022-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொபைல் இணைய வேகம் 10 மடங்கு அதிகரித்துள்ளது.


மொபைல் போன் தகவல் தொடர்புச் சாதனமாக மட்டுமின்றி, நல்லாட்சிக்கான முக்கியக் கருவியாகவும் மாறியுள்ளது. தொழில்நுட்பத்தின் பயன்கள் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக டிஜிட்டல் இந்தியா இயக்கத்தை முன்னெடுத்தோம். தொலைத்தொடர்புத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. உட்கட்டமைப்பு விரிவாக்கப்பட்டது. மொபைல் போன்கள் உள்ளிட்ட சாதனங்களை இந்தியாவிலேயே தயாரிப்பதில் கவனம் செலுத்தினோம்.


கரோனா காலத்திலும் கல்வி, மருத்துவம், பணப் பரிவர்த்தனை, அரசு சேவைகள் தொடர்ந்து கிடைக்க டிஜிட்டல் வசதிகள் உதவின. இணையவழிக் கல்வி வாய்ப்புகளுடன் சுமார் 25 கோடி மாணவர்களை இணைப்பதே எங்கள் முயற்சி.
தற்போது நூற்றுக்கணக்கான அரசு சேவைகள் மொபைல் போனில் கிடைக்கின்றன. நேரடிப் பலன் பரிமாற்றம் மூலம் சுமார் 50 லட்சம் கோடி ரூபாய் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்குச் சென்றுள்ளது. சுமார் ஐந்து லட்சம் கோடி ரூபாய் தவறான கைகளுக்குச் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகையை விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தியுள்ளோம். மொபைல் சேவைகள் மக்களின் பயணம், காத்திருப்பு, செலவு ஆகியவற்றைக் குறைத்து வசதிகளை அதிகரித்துள்ளன.

மலிவான இணையமும், விரைவான இணைப்பும் சிறிய நகரங்களின் இளைஞர்களுக்கு இணைய விளையாட்டு, காணொலி உருவாக்கம் போன்ற துறைகளில் புதிய வருமான வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன. பிராந்திய மொழிகளில் உள்ளடக்கங்களை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் விரிவடைந்துள்ளன.
தொலைபேசி மற்றும் இணைய வலையமைப்பின் பாதுகாப்பு நமது முன்னுரிமையாக இருக்க வேண்டும். அழைப்பவர் யார், குறுஞ்செய்தி உண்மையானதா என்பதை மக்கள் அறிய வேண்டும். பணமும் தனிப்பட்ட தகவல்களும் பாதுகாப்பாக இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.


இணையக் குற்றங்கள் எல்லைகளைக் கடந்து நடக்கின்றன. போலி உருவாக்க காணொலிகளும் பெரும் சவாலாக உள்ளன. மோசடிகள் மக்களைச் சென்றடையும் முன்பே தடுக்கும் உலகளாவிய அமைப்பை உருவாக்க வேண்டும். இந்தியா தனது அனுபவங்களை உலகத்துடன் பகிரத் தயாராக உள்ளது.
இந்தியா தொழில்நுட்ப நுகர்வோர் நிலையிலிருந்து, படைப்பாளர் நிலைக்கு முன்னேறியுள்ளது. தயாரிப்புகளின் வடிவமைப்பு, தொழில்நுட்பம், அறிவுசார் சொத்துரிமை ஆகியவை இந்தியாவுக்குச் சொந்தமாக இருப்பதே அடுத்த இலக்காகும்.


தொலைத்தொடர்புச் சட்டம் மூலம் நவீன ஒழுங்குமுறையை உருவாக்கியுள்ளோம். ஐந்து இடங்களில் செமிகண்டக்டர்களின் வணிக உற்பத்தி தொடங்கியுள்ளது. அடுத்தகட்டத்தில் முழு விநியோகச் சங்கிலிக்கும் கவனம் செலுத்தப்படும்.


தொழில்நுட்பம், ஆராய்ச்சி, தொழில், முதலீடு, புதிய சிந்தனைகளை இணைக்கும் தளமாக இந்திய மொபைல் காங்கிரஸ் மாற வேண்டும். இங்கு உருவாகும் கூட்டாண்மைகள், ஆராய்ச்சித் திட்டங்கள், உலகைச் சென்றடையும் தயாரிப்புகள், மனிதகுலத்துக்குப் பயன்படும் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றால் இந்த மாநாடு நினைவுகூரப்பட வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்க நமது முயற்சிகளைத் தொடர்ந்து விரிவுபடுத்த வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.
இவ்வாறு பிரதமர் பேசினார்.


முந்தைய செய்தி
JSW ஸ்டீல் உற்பத்தி 5% உயர்வு
அடுத்த செய்தி
5 அடுக்கு பாதுகாப்புடன் 24 மணி நேர கண்காணிப்பு : சுனில் பார்தி மிட்டல்

தொடர்புடைய செய்திகள்