ரயில்களை வேகமாக இயக்கும் வகையில், பெட்டிகளை இலகு ரக நவீன பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஜெர்மன் தொழில் நுட்பத்தில் எல்ஹெச்பி (Linke Hofmann Busch) வகை பெட்டிகளை ஐசிஎப் உட்பட இந்தியா ரயில் பெட்டி தொழிற்சாலைகள் உற்பத்தி செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்த வகை ரயில் பெட்டிகளில் இருக்கை அல்லது படுக்கைகளின் எண்ணிக்கை, வழக்கான பெட்டிகளை விட கூடுதலாக இருக்கும். துருப் பிடிக்காத எஃகு பயன்படுத்தி உருவாக்கினாலும் இந்த வகை பெட்டிகள் எடை குறைந்தவை. தெற்கு ரயில்வேயை பொருத்தவரை பெரும்பான்மையான எக்ஸ்பிரஸ் ரயில்கள், இந்த எல்ஹெச்பி வகை பெட்டிகள் கொண்ட ரயில்களாக மாற்றப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக சென்னை-திருப்பதி-சென்னை கருடாத்திரி எக்ஸ்பிரஸ் (16203/16204) ரயிலில் பழைய பெட்டிகளுக்கு பதிலாக எல்ஹெச்பி ரக பெட்டிகளாக மாற்றப்படுகின்றன. அக.23ம் தேதி முதல் இந்த ரயிலில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. கருடாத்திரி எக்ஸ்பிரஸ் ரயிலில் இப்போது முதல் வகுப்பு ஏசி-1, இரண்டு அடுக்கு ஏசி -2, மூன்றடுக்கு ஏசி -2, தூங்கும் வசதிக் கொண்ட 2ம் வகுப்பு பெட்டி-10 2ம் வகுப்பு பெட்டி-5, சரக்கு-கார்டு பெட்டி-2 என என மொத்தம் 21 பெட்டிகள் உள்ளன.
இனி அக்.23 முதல் 19 பெட்டிகளாக குறைக்கப்படும். இதன்படி முதல் வகுப்பு ஏசி-1, இரண்டு அடுக்கு ஏசி -1, மூன்றடுக்கு ஏசி -3, தூங்கும் வசதிக் கொண்ட 2ம் வகுப்பு பெட்டி -7 , முன்பதிவில்லாத 2ம் வகுப்பு பெட்டி-5, சரக்கு-கார்டு பெட்டி-1, ஜெரேட்டர்-கார்டு பெட்டி -1 ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும். இதே ரயில் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக சாம்ராஜ் நகர்-திருப்பதி-சாம்ராஜ்நகர் இடையே திருப்பதி எக்ஸ்பிரஸ் (16219/16220) என்ற பெயரில் இயக்கப்படுகிறது.
அதே நேரத்தில் கர்நாடகாவில் இதே ரயில் தால்குப்பா-சிமோகா டவுன் (56217/56218), மைசூர்-சாம்ராஜ்நகர் (56203/56204), நஞ்சன்கூடு-மைசூர் (56205/56206) இடையே சாதரண பாசஞ்சர் ரயில்களாக இயக்கப்படுகின்றன. தால்குப்பா-மைசூர்(16227/16228) இடையே எக்ஸ்பிரஸ் ரயிலாக சென்று வருகிறது.
இதையடுத்து, சென்னை-திருப்பதி தவிர மீதமுள்ள 5 ரயில்கள் புதிய எல்ஹெச்பி பெட்டிகளாக மாற்றுவது அக்.20 முதல் அக்.22 வரை நடக்கிறது. இப்படி ஒரே ரயில் 6 பெயரில் வெவ்வேறு ஊர்களுக்கு சென்று வருவதால், தலா 21 பெட்டிகளை கொண்ட புதிய எல்ஹெச்பி பெட்டிகளை கொண்ட 5 ரயில்கள் சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் தயார் நிலையில் உள்ளன.