பார்தி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனரான சுனில் பார்தி மிட்டலுக்கு, பிரான்ஸ் குடியரசுத் தலைவர் இம்மானுவேல் மேக்ரோன், அந்நாட்டின் உயரிய தேசிய விருதான ‘லீஜியன் ஆஃப் ஹானர்’ விருதின் நைட் பட்டத்தை வழங்கியுள்ளார்.
இந்தியா – பிரான்ஸ் இடையேயான பொருளாதார உறவுகளை வலுப்படுத்தியதுடன், தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்புத் துறைகளில் ஆற்றிய பங்களிப்புக்காக இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரான்ஸ் தூதர் தியேரி மாத்தூ கூறும்போது, "1992-ம் ஆண்டு ஏர்டெல் தொடங்கப்பட்ட காலத்திலிருந்தே சுனில் பார்தி மிட்டல் பிரான்ஸுடனான உறவை வளர்த்தெடுத்து வருகிறார். தற்போது யூடெல்சாட் நிறுவனத்தின் இணைத் தலைவராக இருந்து, விண்வெளி மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத் துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பை மேம்படுத்தி வருகிறார்" என்றார்.
சுனில் பார்தி மிட்டல் கூறும்போது, "1992-ம் ஆண்டு பிரெஞ்சு நிறுவனமான கொம்பனி ஜெனரல் டெஸ் ஈக்ஸ், பார்தியுடன் இணைந்து இந்தியாவில் மொபைல் தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியது.அப்போது பிரான்ஸுடனான எனது தொடர்பு தொடங்கியது. இரு நாடுகளின் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்தத் தொடர்ந்து பாடுபடுவேன்" என்றார்.