செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பணிகளைச் செய்தாலும், அதில் ஏற்படும் தவறுகளுக்கு ஊழியர்களே பொறுப்பேற்க வேண்டும் என்று அட்லாசியன் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மைக் கேனன்-புரூக்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மென்பொருள் நிறுவனமான அட்லாசியனின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மைக் கேனன்-புரூக்ஸ், அலுவலகப் பணிகளில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவது தொடர்பாக இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறும்போது, "ஒருவர் சாட்ஜிபிடி உதவியுடன் ஒரு பணியைச் செய்தாலும், பணியில் ஏற்படும் தவறுகளுக்கான பொறுப்பை செயற்கை நுண்ணறிவின் மீது சுமத்த முடியாது. செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் செய்யும் மாற்றங்கள் யாரால், எப்போது மேற்கொள்ளப்பட்டன என்பதைத் தெளிவாகக் கண்டறிய வேண்டும். அலுவலகங்களில் இத்தகைய கருவிகளைப் பயன்படுத்தும்போது, ரகசியத் தகவல்கள் பாதுகாக்கப்படுவதும், அனுமதி மற்றும் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப்படுவதும் அவசியம்" என்றார்.