சென்னை
இந்தியாவின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சந்தையில் ஆப்பிள் நிறுவனத்தின் ‘ஆப்பிள் பே’ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச் சாதனங்களைப் பயன்படுத்தி, காண்டாக்ட்லெஸ் முறையில் பணம் செலுத்த முடியும்.முதல்கட்டமாக, ஆப்பிள் பே சேவை, ஆக்ஸிஸ் வங்கியின் குறிப்பிட்ட விசா, மாஸ்டர் கார்டு கிரெடிட் கார்டுகளுக்கு கிடைக்கும். அடுத்தகட்டமாக மேலும் பல வங்கிகளின் கார்டுகளுக்கு இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. தகுதியான கிரெடிட் கார்டுகளை ஆப்பிள் வாலட்டில் சேர்த்து, இந்தியாவில் உள்ள ஆயிரக்கணக்கான நேரடி மற்றும் ஆன்லைன் வணிக நிறுவனங்களில் பணம் செலுத்தலாம். என்.எஃப்.சி. வசதி கொண்ட காண்டாக்ட்லெஸ் முனையங்களிலும் உலகளவில் இந்த சேவையைப் பயன்படுத்த முடியும்.
கடைகளில் பணம் செலுத்த, ஐபோனில் பக்கவாட்டு பட்டனை இருமுறை அழுத்தி, ஃபேஸ் ஐடி (Face ID), டச் ஐடி (Touch ID) அல்லது சாதனத்தின் கடவுக்குறியீடு மூலம் பரிவர்த்தனையை அங்கீகரிக்க வேண்டும். பின்னர் காண்டாக்ட்லெஸ் கட்டண முனையத்துக்கு அருகில் சாதனத்தை வைத்தால் பணம் செலுத்தப்படும். ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கார்டு பின் அல்லது ஓடிபி உள்ளிட வேண்டியதில்லை.
ஆப்கள் மற்றும் இணையதளங்களிலும் ஐபோன், ஐபேட் மூலம் ஆப்பிள் பே-ஐ பயன்படுத்தி பணம் செலுத்தலாம். இதனால் கார்டு விவரங்கள், பில்லிங் மற்றும் டெலிவரி முகவரி உள்ளிட்ட தகவல்களை மீண்டும் மீண்டும் உள்ளிட வேண்டிய அவசியம் குறையும். மேலும், ஆப்பிள் பே மூலம் தகுதியான கார்டுகளைப் பயன்படுத்தும்போதும், அந்த கார்டுகளுடன் இணைந்த ரிவார்டுகள் மற்றும் பிற சலுகைகள் தொடர்ந்து கிடைக்கும் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதல்கட்டமாக, உணவு மற்றும் பானங்கள், பயணம், ஆடை மற்றும் வாழ்க்கை முறை சார்ந்த வணிகப் பிரிவுகளில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்தகட்டத்தில் மேலும் பல வணிக நிறுவனங்களும் ஆப்களும் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.