இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் தொடரில், பேட்டில் பந்து பட்டதா என்பதைத் துல்லியமாகக் கண்டறிய உதவும் ‘சோனிக்’ (Sonic) என்ற புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்படுகிறது. நடுவர் முடிவுகளை மறுபரிசீலனை செய்யும் டிஆர்எஸ் முறையில் இது பயன்படுத்தப்பட உள்ளது.
நெருக்கடியான ஆட்டச் சூழலில் பந்து பேட்டில் பட்டதா அல்லது கால்காப்பில் பட்டதா என்பதைக் கண்டறிவது நடுவர்களுக்குச் சவாலாக இருக்கும். குறிப்பாக, பேட்டும் கால்காப்பும் அருகருகே இருக்கும்போது முடிவெடுப்பதில் குழப்பம் ஏற்படலாம். இதுபோன்ற சூழல்களில் மூன்றாவது நடுவருக்கு உதவுவதே சோனிக் தொழில்நுட்பத்தின் நோக்கமாகும்.
நியூசிலாந்தைச் சேர்ந்த விர்ச்சுவல் ஐ நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தத் தொழில்நுட்பம், ஒலியை ஆய்வு செய்து பேட் மற்றும் பந்து இடையிலான தொடர்பைக் கண்டறிய உதவுகிறது.
ஏற்கெனவே பயன்படுத்தப்படும் டி.ஆர்.எஸ். முறைக்கு இது கூடுதல் தகவல்களை வழங்கும். இதன் மூலம் சர்ச்சைக்குரிய முடிவுகளை ஆய்வு செய்து நடுவர்கள் முடிவெடுக்க முடியும்.
இந்தத் தொழில்நுட்பம் பல்வேறு கட்டச் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, இந்தியா – நியூசிலாந்து தொடரில் பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளது. எதிர்காலத்தில் மற்ற சர்வதேச தொடர்களில் இதைப் பயன்படுத்துவதற்கான முடிவுகள் பின்னர் எடுக்கப்படும். இந்த தொடரில் ஐந்து டி-20 போட்டிகள், ஐந்து ஒருநாள் போட்டிகள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளன.