ரூபாய் மதிப்பு சரிந்து வரும் நிலையில், இந்திய நிறுவனங்களின் பெரிய அளவிலான வெளிநாட்டு முதலீடுகள் மீதான ஆய்வை இந்திய ரிசர்வ் வங்கி தீவிரப்படுத்தியுள்ளது. மூலதனம் வெளியேறுவதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்தக் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்காக முக்கிய வங்கிகளுக்கு கடந்த வாரம் ஒரே மாதிரியான சரிபார்ப்புப் பட்டியலை ரிசர்வ் வங்கி அனுப்பியுள்ளது. இதன்படி, 100 கோடி அமெரிக்க டாலருக்கும் அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான விரிவான விவரங்களை வங்கிகள் அளிக்க வேண்டும்.
மேலும், முதலீடு செய்யும் நிறுவனத்தின் நிகர சொத்து மதிப்பைவிட நான்கு மடங்கு என்ற ஒழுங்குமுறை வரம்பை மீறும் பரிவர்த்தனைகள் குறித்தும் கூடுதல் தகவல்கள் கோரப்பட்டுள்ளன. தொடர்ச்சியான டாலர் தேவை மற்றும் மூலதன வெளியேற்றத்தால் நடப்பாண்டில் ரூபாய் மதிப்பு ஐந்து சதவீதத்துக்கும் அதிகமாகச் சரிந்துள்ளது. இதையடுத்து ரூபாயை ஆதரிக்கும் முயற்சிகளை ரிசர்வ் வங்கி வலுப்படுத்தியுள்ளது.
நிறுவனங்களின் அந்நியச் செலாவணி இடர்காப்பு நடவடிக்கைகளுக்கான விதிகளை ஏற்கெனவே கடுமையாக்கியுள்ள ரிசர்வ் வங்கி, இறக்குமதியாளர்களின் டாலர் கொள்முதலைக் கட்டுப்படுத்தவும் முயன்றுள்ளது.
புதிய சரிபார்ப்புப் பட்டியலின்படி, வெளிநாட்டுச் சொத்துகளின் மதிப்பீடுகளை வங்கிகள் சுயமாக ஆய்வு செய்ய வேண்டும். மதிப்பீட்டு அறிக்கைகளை மட்டும் நம்பியிருக்காமல், கையகப்படுத்துதலுக்காக வழங்கப்படும் கூடுதல் விலை மற்றும் பங்கு பரிமாற்ற விகிதங்களையும் பரிசீலிக்க வேண்டும்.
முதலீடு செய்யும் நிறுவனத்தின் வருவாய்த் தரம், முந்தைய வெளிநாட்டு முதலீடுகள், ஏற்கெனவே ஏற்றுள்ள நிதிக் கடப்பாடுகள் ஆகியவற்றையும் வங்கிகள் ஆராய வேண்டும். நிதி அதிர்ச்சிகளைத் தாங்கும் நிறுவனத்தின் திறனும் மதிப்பிடப்பட வேண்டும்.
எனினும், வெளிநாட்டு முதலீடுகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடுகள் எதையும் விதிக்கவில்லை.
ஏற்கெனவே உள்ள நடைமுறைகளின்கீழ் ஆய்வையும் தகவல் சேகரிப்பையும் தீவிரப்படுத்துவதே தற்போதைய நடவடிக்கையாகும். பெரிய பரிவர்த்தனைகளின் மதிப்பீடு மற்றும் முதலீட்டாளரின் நிதிநிலையை வங்கிகள் நுணுக்கமாக ஆராய்வதற்கு இந்தப் பட்டியல் வழிகாட்டுகிறது. இதன்மூலம் வெளிநாட்டு முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பான தகவல்கள் ஒரே வடிவத்தில் திரட்டப்படும் என தெரிய வந்துள்ளது.