உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த, பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பிஜியில் நடைபெற்ற பருவநிலை மாநாட்டில் பசிபிக் நாடுகள் வலியுறுத்தின.
துருக்கியில் நவம்பரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிஓபி31 பருவநிலை மாநாட்டுக்கு முன்னதாக, பிஜியின் நாடி நகரில் அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டம் நேற்று தொடங்கியது. இதில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
பருவநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் பசிபிக் நாடுகள், பருவநிலை நிதியை எளிதாகப் பெறுதல், பெருங்கடல்களைப் பாதுகாத்தல், தொழில்புரட்சிக்கு முந்தைய நிலையைவிட உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரிக்குள் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு பேச்சுவார்த்தையில் முன்னுரிமை அளிக்கக் கோரின.
பிஜி பருவநிலை அமைச்சர் லிண்டா தபுயா பேசும்போது, “1.5 டிகிரி வெப்பநிலை வரம்பை வேகமாகக் கடந்து கொண்டிருக்கிறோம்.
எங்கள் வீடுகளை எட்டும் கடல்நீர், நிறமிழந்த பவளப்பாறைகள், இடமாற்றம் செய்யப்பட்ட கிராமங்கள் ஆகியவை இதன் பாதிப்புகளை வெளிப்படுத்துகின்றன” என்றார். இந்த வரம்பு மீறப்படுவதை அமைதியாக ஏற்க முடியாது என்றும், 1.5 டிகிரி இலக்கைக் காப்பது முதன்மையான சட்டப்பூர்வக் கடமை என்றும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, கடல்மட்ட உயர்வால் பாதிக்கப்படும் துவாலு நாட்டைப் பார்வையிட்ட பசிபிக் தீவு நாடுகளின் தலைவர்கள், ஜியில் கூட்டறிக்கையை ஏற்றனர்.
வாயு வெளியேற்றத்தை பெருமளவில், விரைவாகவும் தொடர்ச்சியாகவும் குறைக்க அதில் அழைப்பு விடுக்கப்பட்டது. வெப்பநிலையில் ஏற்படும் ஒவ்வொரு சிறிய உயர்வும் பருவநிலை பாதிப்புகளைத் தீவிரப்படுத்தி, மீட்டெடுக்க முடியாத இழப்புகளுக்கான அபாயத்தை அதிகரிக்கும் என்று அறிக்கை தெரிவித்தது.
ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் ஆசிய பசிபிக் பிராந்திய இயக்குநர் டெச்சென் செரிங், 1.5 டிகிரி வரம்பை மீறுவதும் குறிப்பிடத்தக்க சுற்றுச்சூழல் சேதமும் தற்போது தவிர்க்க முடியாதவை என்றார். வெப்பநிலை உச்சத்தைத் தாண்டிய பிறகும் பசிபிக் நாடுகளுக்கான அபாயங்கள் நீடிக்கும் என்று அவர் எச்சரித்தார்.