ரஷ்யாவின் வோரோனெஷ் பிராந்தியத்தில் உள்ள போரிசோக்லெப்ஸ்க் ராணுவ விமானத் தளத்தில் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், நான்கு போர் விமானங்கள் அழிக்கப்பட்டதாகவும், மேலும் இரண்டு விமானங்கள் சேதமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
போரிசோக்லெப்ஸ்க் ராணுவ விமானத் தளத்தில் கடந்த 14-ம் தேதி இரவில் நடைபெற்ற இந்தத் தாக்குதலுக்கு, உக்ரைனில் தயாரிக்கப்பட்ட ‘நெப்டியூன்’ ஏவுகணை பயன்படுத்தப்பட்டதாக உக்ரைன் கடற்படை தெரிவித்துள்ளது. தாக்குதலுக்குப் பிறகு விமானத் தளத்தில் வெடிப்புகளும், தீ விபத்தும் ஏற்பட்டதாக உக்ரைன் ராணுவத் தலைமையகம் கூறியுள்ளது. தாக்குதலுக்குள்ளானவை ரஷ்யாவின் எஸ்யூ–34எம் ரக போர் விமானங்களாகும்.இந்த விமானங்கள் உக்ரைன் மீது புதிய தாக்குதல்களை நடத்துவதற்காக வெடிகுண்டுகள் ஏற்றப்பட்ட நிலையில் தயாராக இருந்ததாக ஜெலன்ஸ்கி கூறினார். தாக்குதலின் விளைவுகளைக் காட்டுவதாகக் கூறி புகைப்படத்தையும் பகிர்ந்த அவர், துல்லியமாகச் செயல்பட்ட கடற்படை வீரர்களுக்குப் பாராட்டு தெரிவித்தார். ரஷ்யா போரை நீட்டிப்பதால், தொலைதூரத் தாக்குதல்கள் தொடரும் என்றும் தெரிவித்தார்.
போரிசோக்லெப்ஸ்க் விமானத் தளம் போர்முனையிலிருந்து சுமார் 370 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாக்குதல் நடந்த பகுதியில் பெரும் வெடிப்புகளும் தீப்பிழம்புகளும் எழுந்த போது உள்ளூர்வாசிகளால் எடுக்கப்பட்ட காணொலிகள் வெளியாகியுள்ளன. வோரோனெஷ் ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ், ட்ரோன் தாக்குதல் அபாயம் குறித்து பலமுறை எச்சரிக்கை விடுத்திருந்தார்.
எஸ்யூ–34எம் விமானங்களை, போர்முனைக்கு அருகிலுள்ள உக்ரைன் நகரங்கள் மீது மிதவை வெடிகுண்டுகளை வீசுவதற்கு ரஷ்யா அடிக்கடி பயன்படுத்துகிறது. இவை ஒவ்வொன்றும் பல கோடி டாலர் மதிப்புடையவை. இதனிடையே, ரஷ்யாவின் ஓரியோல் பிராந்தியத்தில் தாக்குதல் ட்ரோன்களைச் சேமித்து ஏவும் நிலையமும், கருங்கடலில் மற்றொரு இலக்கும் தாக்கப்பட்டதாக ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.