Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

ஹோர்முஸில் மூழ்கிய கப்பல்! கடலில் மிதக்கும் ஐபோன்கள்

ஹோர்முஸில் மூழ்கிய கப்பல்! கடலில் மிதக்கும் ஐபோன்கள்
ர்மூஸ் நீரிணையில் மூழ்கிய நிலையில் உள்ள கன்டெய்னர்களுக்கு அருகே கடலில் மிதக்கும் ஐபோன் பெட்டிகள். (அடுத்த படம்) கடலில் மூழ்கும் கப்பலின் சிதைந்த பாகங்கள்.

சுமார் 2,500 சரக்குப் பெட்டகங்களில் ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களும் கப்பலில் இருந்ததாக கூறப்படுகிறது.

பகிரவும் WhatsApp Facebook

ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து, ஐபோன் பெட்டிகளும் விலையுயர்ந்த வாசனைத் திரவியப் பொருட்களும் கடலில் மிதக்கும் காணொளி வெளியாகியுள்ளது. கப்பலில் இருந்த 21 பணியாளர்களும் காயமின்றி மீட்கப்பட்டதாக சிங்கப்பூர் கடல்சார் மற்றும் துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் கொடியுடன் இயங்கிய ‘ஜிஎஃப்எஸ் பிரைட்’ சரக்குக் கப்பல், நேற்று முன்தினம் தாக்குதலுக்குள்ளாகி தீப்பிடித்து மூழ்கியதாகக் கடல்சார் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல், துபாயிலிருந்து பொருட்களை ஏற்றிச் சென்றதாக முதற்கட்டத் தகவல்கள் கூறுகின்றன.


சமூக வலைதளங்களில் பரவும் காணொளியில், கடலில் ஐபோன் பெட்டிகளும் வாசனைத் திரவியப் பொதிகளும் மிதக்கின்றன. சிறிய படகுகளில் வரும் சிலர் அவற்றைச் சேகரிக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. 

கப்பலில் சுமார் 2,500 சரக்குப் பெட்டகங்கள் இருந்ததாக செய்திகள் வெளியிட்டுள்ளன. அவற்றில் ஐபோன்கள் மற்றும் விலையுயர்ந்த வாசனைத் திரவியங்களும் இருந்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்படாத கடற்பாதையில் சென்றபோது கடல் கண்ணிவெடியில் சிக்கிக் கப்பல் மூழ்கியதாக ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. ஆனால், அடையாளம் தெரியாத பொருள் தாக்கியதாகக் கடல்சார் அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால், கப்பல் மூழ்கியதற்கான துல்லியமான காரணம் உறுதியாகவில்லை.

ஹோர்முஸ் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அப்பகுதியில் 48 மணி நேரத்தில் குறைந்தது ஐந்து சம்பவங்கள் பதிவானதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. அவற்றில் ஆளில்லா விமானத் தாக்குதல்களும் அடங்கும்.

இதனிடையே, செப்டம்பர் 23-ம் தேதி தாக்குதலுக்குள்ளான ‘கேப் டாவ்’ என்ற மற்றொரு சரக்குக் கப்பலும் ஹோர்முஸ் அருகே மூழ்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு பணியாளர் உயிரிழந்தார். மற்றவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

ஓமன் வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படைக் கப்பல்களைக் கண்காணித்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஈரானுடன் தொடர்புடைய படகை அக்டோபர் 6-ம் தேதி அமெரிக்கப் படைகள் அழித்தன. அதற்கு முன்பே அதிலிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதால் உயிரிழப்பு ஏற்படவில்லை என்று அமெரிக்க மத்தியப் படைத்தளம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுப் போக்குவரத்தில் முக்கியமான ஹோர்முஸ் நீரிணையில் தொடரும் தாக்குதல்கள், வணிகக் கப்பல்களின் பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளன. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் பதற்றமும் இப்பகுதியின் கடல்வழிப் போக்குவரத்தைப் பாதித்துள்ளது. கடந்த பத்து நாட்களில் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளதாகவும் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முந்தைய செய்தி
ரூ.209 கோடியாக குறைக்கப்பட்ட சிட்டி யூனியன் வங்கி GST நிலுவை!
அடுத்த செய்தி
தீபாவளி ஆவின் இனிப்புகளுக்கு விற்பனை இலக்கு - அமைச்சர் விஜயலட்சுமி தகவல்

தொடர்புடைய செய்திகள்