தீபாவளியையொட்டி ஆவின் சார்பில் தயாரிக்கப்படும் இனிப்புகள் மற்றும் பலகாரங்களுக்கான விற்பனை இலக்கு விரைவில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயலட்சுமி தெரிவித்தார்.
திருச்சி கொட்டப்பட்டி ஆவின் நிறுவனத்தில், பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி நேற்று ஆய்வு செய்தார். பிறகு, நுகர்வோரின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் 500 மில்லி லிட்டர் பிரீமியம் பால் பாக்கெட், கேன்டி குச்சி ஐஸ் மற்றும் ரூ.5 விலையிலான தயிர் கப் உள்ளிட்ட புதிய தயாரிப்புகளின் விற்பனையை அமைச்சர் விஜயலட்சுமி அறிமுகப்படுத்தினார்.
இதைத்தொடர்ந்து அமைச்சர் விஜயலட்சுமி கூறியதாவது: தமிழகம் முழுவதும் தற்போது தினமும் 32 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழக அரசின் உத்தரவுப்படி பால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆவினுக்கு பால் வழங்கும் உற்பத்தியாளர்களின் எண்ணிக்கையும், கொள்முதல் அளவும் அதிகரித்து வருகின்றன.
அடுத்த ஒரு மாதத்துக்குள் தமிழகத்தில் தினசரி பால் கொள்முதல் மேலும் 3.5 லட்சம் லிட்டர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால் கொள்முதல் விலை உயர்வுக்குப் பிறகு விவசாயிகள் அதிக அளவில் ஆவினுக்கு பால் வழங்கி வருகின்றனர்.
திருச்சியில் முன்பு தினசரி 1.75 லட்சம் லிட்டராக இருந்த பால் கொள்முதல் தற்போது 1.90 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலையாக லிட்டருக்கு ரூ.44 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை உற்பத்தியாளர்களுக்கு முறையாக சென்றடைகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து ரூ.1 பிடித்தம் செய்யப்பட்டு, காப்பீட்டுத் திட்டத்தில் அவர்களுக்கே திருப்பி வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட்டுகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், விலை உயர்வு தொடர்பாகவும் புகார்கள் எழுந்தன. இந்த பிரச்சினைகள் சரிசெய்யப்பட்டுள்ளன. ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தும் திட்டம் தற்போது இல்லை. நுகர்வோரின் தேவைக்கு ஏற்ப பால் மற்றும் பால் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆவின் சார்பில் தயாரிக்கப்படும் இனிப்புகள் மற்றும் பலகாரங்களுக்கான விற்பனை இலக்கு விரைவில் அறிவிக்கப்படும் இவ்வாறு அமைச்சர் விஜயலட்சுமி கூறினார்.