கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் சரக்கு போக்குவரத்தில் 6.14 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
சரக்குப் போக்குவரத்து அளவு கடந்தாண்டு செப்டம்பரில் 127.52 மில்லியன் டன்னாக இருந்த நிலையில், நடப்பாண்டில் 135.35 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தை விட 6.14 சதவீதம் அதிகமாகும்.இந்த மாதத்தில் பல்வேறு முக்கிய சரக்கு வகைகள் சிறந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. தானியங்கள் 25 சதவீதம், சிமெண்ட் மூலப்பொருள் 20 சதவீதம், உள்நாட்டு பெட்டகம் 10 சதவீதம், நிலக்கரி 9 சதவீதம், இதர சரக்குகள் 8.2 சதவீதம், கனிம எண்ணெய் 6 சதவீதம், எஃகு 5.5 சதவீதம், இரும்புத்தாது 5.2 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன.
செப்டம்பர் மாதத்தில் மின் நிலையங்களுக்கான உள்நாட்டு நிலக்கரி விநியோகத்தை இந்திய ரயில்வே அதிகரித்துள்ளது. இது 11.6 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரை விட தற்போது சரக்குப் போக்குவரத்து வருவாய் 9.3 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.1,266 கோடி கிடைத்துள்ளது.
மொத்தம் 833.7 மில்லியன் டன்னிற்கும் அதிகமாக சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 4.1 சதவீதம் வளர்ச்சியாகும். சரக்குப் போக்குவரத்து வருவாயும் 3.7 சதவீத வளர்ச்சியைக் கண்டுள்ளது.