கரூர்:
பூரண மதுவிலக்கு அமல்படுத்தி பணியாளர்களுக்கு மாற்றுத் துறையில் நிரந்தர பணி வழங்க வேண்டும் என கரூரில் நடைபெற்ற தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர்கள் நல சங்கத்தின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி தலைமையிலான மாநாட்டில், செயல் தலைவர் தங்கவேல், உழைப்போர் உரிமை இயக்க மாநிலச் செயலாளர் சுரேஷ், கரூர் மாவட்ட செயலாளர் பால்ராஜ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:-
பூரண மதுவிலக்கை அமல்படுத்தி டாஸ்மாக் பணியாளர்களுக்கு மாற்றுத் துறையில் நிரந்தர பணி வழங்க வேண்டும். டாஸ்மாக் பணியாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
பணி நேரத்தை 8 மணி நேரமாக அறிவித்து, தொழிற்சங்க தேர்தல் நடத்த வேண்டும். வார விடுப்பு, பண்டிகை காலங்களில் விடுப்பு, பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் குடும்பத்தினருக்கு வாரிசு வேலை வழங்கி, இழப்பீடு வழங்க வேண்டும்.
தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள பணியாளர்களுக்கு பிழைப்பு ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.