பழனி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக ரோப் கார் மற்றும் வின்ச் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குழந்தைகளுடன் வரும் பக்தர்கள் ரோப் கார் சேவையை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று ரோப் கார் நிலையத்தில் உள்ள மின் மோட்டாரின் ஷாப்ட் திடீரென பழுதடைந்ததால் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டது.
பழுதடைந்த ஷாப்ட்டை சரி செய்வதற்காக கோவைக்கு கொண்டு செல்ல உள்ளதாகவும், பழுது நீக்கப்படும் வரை ரோப் கார் சேவையை இயக்க முடியாது என்றும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மேலும், மலைக் கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் மாற்று ஏற்பாடாக வின்ச் ரயில் மற்றும் படிப்பாதையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கோயில் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, பழனி முருகன் கோயிலில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்து கடந்த மாதம் 22ஆம் தேதி தான் ரோப் கார் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. ஒரு மாதம் கூட முழுமையாக இயங்காத நிலையில் மீண்டும் பழுது ஏற்பட்டு சேவை நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.