தமிழகத்தில் ரூ.3,663 கோடி மதிப்புள்ள சாலைத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தில் 13,000 கோடி மதிப்புள்ள, நெடுஞ்சாலை, ரயில்வே உள்கட்டமைப்பு திட்டங்கள், துறைமுகத் திட்டங்கள் தொடக்க விழா சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியை, முதல்வர் விஜய் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். நிகழ்ச்சியில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், மாநில நீர்வளத்துறை அமைச்சர் எஸ்.ஆனந்த், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ஆகியவற்றின் சார்பில் ரூ.1,320 கோடியில் புதிதாக அமைக்கப்படவுள்ள திருவாரூர் புறவழிச்சாலைக்கு, பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். ஏற்கெனவே கட்டுமானப் பணிகள் முடிவடைந்த வடுகப்பட்டி–தெற்கு வெங்காநல்லூர் சாலை, வாடிப்பட்டி–தாமரைப்பட்டி மதுரை சுற்றுச்சாலை ஆகியவற்றையும் அவர் திறந்து வைத்தார்.
திறக்கப்பட்ட இரண்டு சாலைகளின் மொத்த மதிப்பு ரூ.2,343 கோடி. அவற்றின் மொத்த நீளம் 66 கிலோமீட்டர். புதிய திருவாரூர் புறவழிச்சாலையையும் சேர்த்து, மூன்று திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.3,663 கோடியாகும்.
புதிய புறவழிச்சாலைக்கு அடிக்கல்
நாகப்பட்டினம்–தஞ்சாவூர் இடையேயான தேசிய நெடுஞ்சாலை எண் 83-ல், திருவாரூர் புறவழிச்சாலை 15 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலையாக அமைக்கப்பட உள்ளது. பணிக்கான தொடக்கத் தேதி நிர்ணயிக்கப்பட்டதும், அந்தத் தேதியிலிருந்து 24 மாதங்களுக்குள் கட்டுமானத்தை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இதனுடன் ஏழு கிலோமீட்டர் சேவை மற்றும் இணைப்புச் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. 568 மீட்டர் நீளமுள்ள ஒரு ரயில்வே மேம்பாலம், இரண்டு பெரிய பாலங்கள், ஒரு சிறிய பாலம் கட்டப்பட உள்ளது. பெரிய பாலங்களின் நீளம் முறையே 100 மீட்டர், 210 மீட்டராக இருக்கும்.
மேலும், கனரக வாகனங்கள் செல்ல நான்கு சுரங்கப்பாதைகள், சிறியரக வாகனங்கள் செல்ல ஏழு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட உள்ளன. எட்டு பேருந்து நிறுத்த வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளன.
முடிவுற்ற சாலைகள் திறப்பு
தேசிய நெடுஞ்சாலை எண் 744-இல், வடுகப்பட்டி–தெற்கு வெங்காநல்லூர் இடையே 36 கிலோமீட்டர் நீளத்தில் நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1,318 கோடி மதிப்பிலான இந்தப் பணிகள் கடந்த ஜூன் 13 அன்று முடிவடைந்தன.
இதில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் நகரங்களுக்கான 28 கிலோமீட்டர் ஒருங்கிணைந்த புறவழிச்சாலை இடம்பெற்றுள்ளது. 17 கிலோமீட்டர் சேவை மற்றும் இணைப்புச் சாலைகள், இரண்டு ரயில்வே மேம்பாலங்கள், ஒரு மேம்பாலம், இரண்டு பெரிய பாலங்கள், 19 சிறிய பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்வே மேம்பாலங்கள் முறையே 183 மீட்டர், 197 மீட்டர் நீளமுடையவை. சேவைச் சாலைகளில் அமைந்துள்ள பெரிய பாலங்கள் 75 மீட்டர், 120 மீட்டர் நீளமுடையவை. ஒரு சுங்கச்சாவடி, 33 பேருந்து நிறுத்த வசதிகளும் உள்ளன.
வடுகப்பட்டி–தெற்கு வெங்காநல்லூர் சாலையில் கனரக வாகனங்களுக்கு ஏழு சுரங்கப்பாதைகள், இலகுரக வாகனங்களுக்கு எட்டு சுரங்கப்பாதைகள், சிறியரக வாகனங்களுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சாலையில் 62 பெட்டி வடிவ நீர்வழிக் கட்டமைப்புகளும் உள்ளன.
தேசிய நெடுஞ்சாலை எண் 744ஏ-ல், வாடிப்பட்டி–தாமரைப்பட்டி இடையே அமைக்கப்பட்டுள்ள மதுரை சுற்றுச்சாலை 30 கிலோமீட்டர் நீளமுடையது. ரூ.1,025 கோடியில் மேற்கொள்ளப்பட்ட இப்பணிகள் கடந்த ஆகஸ்ட் 31 அன்று முடிவடைந்தன.
இச்சாலையில் 11 கிலோமீட்டர் சேவை மற்றும் இணைப்புச் சாலைகள், நான்கு பெரிய பாலங்கள், 29 சிறிய பாலங்கள், இரண்டு மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வாகன மேல்கடப்புப் பாலங்கள், மூன்று பாதசாரிச் சுரங்கப்பாதைகள், வனவிலங்குகள் கடந்து செல்ல ஒரு மேல்கடப்புப் பாலமும் உள்ளது.
நான்கு பெரிய பாலங்களின் நீளம் முறையே 65, 210, 96, 75 மீட்டராகும். ஒரு சுங்கச்சாவடி, 16 பேருந்து நிறுத்த வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
மதுரை சுற்றுச்சாலையில் கனரக வாகனங்களுக்கு இரண்டு சுரங்கப்பாதைகள், இலகுரக வாகனங்களுக்கு ஐந்து சுரங்கப்பாதைகள், சிறியரக வாகனங்களுக்கு ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 51 பெட்டி வடிவ நீர்வழிக் கட்டமைப்புகள், 93 குழாய் வடிவ நீர்வழிக் கட்டமைப்புகளும் இந்தச் சாலையில் அமைக்கப்பட்டுள்ளன.