சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) 2026-ம் ஆண்டுக்கான குரூப்-4 தேர்வு அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதையடுத்து தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.குரூப்-4 தேர்வு மூலம் அரசுத் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டுக்கான தேர்வில் சுமார் 10,000 காலிப் பணியிடங்கள் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்வுக்கு சுமார் 15 லட்சம் பேர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படும்.
டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட 2026-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு அட்டவணையில் குரூப்-4 தேர்வு, டிசம்பர் 20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தேர்வர்கள் இதற்கான அறிவிப்பை எதிர்பார்த்து வந்தனர்.
தேர்வுக்கான கல்வித் தகுதி, வயது வரம்பு, கட்டணம், விண்ணப்பிக்கும் காலம் உள்ளிட்ட விவரங்கள் நாளை வெளியாகும் அறிவிப்பில் தெரியவரும்.