ஐந்து முனைப் போட்டி நிலவிய மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது அரசியல் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக தேர்தல் களத்தில் பொதுத் தேர்தலுக்கும், இடைத்தேர்தலுக்கும் வாக்குகள் பதிவாகும் சதவீதம் தொடர்ந்து மாறுபட்டு வந்துள்ளது. வேட்பாளர் மறைவு உள்ளிட்ட காரணங்களால், ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடக்கும்போது, அரசியல் கட்சிகள் கூடுதல் கவனத்துடன் அந்த தேர்தலை அணுகும் நிலை ஏற்படும்.வாக்குக்கு பணம், பரிசு, அசைவ விருந்து என வாக்காளர்களைக் கவர பல்வேறு ஆயுதங்களை கட்சிகள் பயன்படுத்துவதால் இடைத்தேர்தல்கள் திருவிழாக்கள்போல நடந்து வருகின்றன. இதனால், இடைத்தேர்தல்களில் வாக்குப்பதிவு கணிசமாக அதிகரித்து வந்துள்ளது.
ஆனால், அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா காரணமாக இடைத்தேர்தல் நடந்த மதுராந்தகம், தாராபுரத்தில், ஐந்துமுனை போட்டி நிலவியும், வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது.
மதுராந்தகம் தொகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத்தேர்தலில் 93.23 சதவீத வாக்குகள் பதிவாகின. தற்போதைய இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் 7.33 சதவீதம் குறைந்து, 85.90 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது. தாராபுரம் தொகுதியில் பொதுத்தேர்தலில் 89.90 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இடைத்தேர்தலில் 9.59 சதவீதம் குறைந்து, 80.31 சதவீதம் மட்டுமே பதிவாகியுள்ளது.
இதுகுறித்து அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது: ஒரு தொகுதியின் எம்எல்ஏ பதவியேற்ற சில நாட்களில் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் இணைந்து, அதே தொகுதியில் போட்டியிடுவது இதுவரை நடந்ததில்லை. இதனால், இரு தொகுதிகளிலும் வேட்பாளர்களுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது.
இரு தொகுதியிலும் ஐந்து முனைப் போட்டி நிலவியது, முதல்வர் விஜய் ஒரு தொகுதிக்கு தலா இரு நாட்கள் என பிரச்சாரம் மேற்கொண்டது, மு.க.ஸ்டாலின், உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, சீமான் மற்றும் இடதுசாரி தலைவர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் என பெரும்படையே தேர்தல் களத்தில் வாக்கு சேகரித்தும், வாக்கு சதவீதம் உயரவில்லை. இது திணிக்கப்பட்ட தேர்தல் என்பதை உணர்ந்த வாக்காளர்கள் வாக்களிக்க வராமல், அரசியல் கட்சியினருக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
’வரலாறு’ படைத்த இடைத்தேர்தல்கள்
- கடந்த 2011- 26 வரையிலான காலகட்டத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், அதிகபட்சமாக ஏற்காடு தொகுதியில் 89.16 சதவீதம் (2013) வாக்குகள் பதிவாகின. 2011-ல் திருச்சி மேற்கு தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் குறைந்தபட்சமாக 61.12 சதவீதம் பதிவாகியுள்ளது.
- 2019-ம் ஆண்டில் மட்டும் 24 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்துள்ளது. 18 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழப்பு மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி உள்ளிட்ட 4 எம்.எல்.ஏக்கள் மறைவால் 22 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடந்தது.
- முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணரெட்டிக்கு நீதிமன்றம் விதித்த சிறை தண்டனையால் அவரின் பதவி பறிக்கப்பட்டதால் ஒசூர் தொகுதிக்கும், நாங்குநேரி எம்.எல்.ஏ.வாக இருந்த வசந்தகுமார் எம்.பி.யாக தேர்வு பெற்றதால் அந்த தொகுதிக்கும் 2019-ல் இடைத்தேர்தல் நடந்தது.
- ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவால் 2023-ல் ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் 74.79 சதவீதமும், அவரது மகன் திருமகன் ஈவெரா மறைவால் அதே தொகுதியில் 2025-ல் நடந்த தேர்தலில் 67.97 சதவீத வாக்குகளும் பதிவாகின.
- கடந்த 15 ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த 36 இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன. 2017-ல் சென்னை ஆர்.கே. நகர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், சுயேட்சை சின்னத்தில் போட்டியிட்ட டிடிவி தினகரன் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது இடைத்தேர்தல் களத்தில் புதிய வரலாறு.