மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான தவெக வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், அக்கட்சி எம்எல்ஏக்களின் பலம் 109-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த ஏப்ரலில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுராந்தகம் தொகுதியில் வென்ற மரகதம் குமரவேல், தாராபுரத்தில் வென்ற சத்தியபாமா ஆகியோர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதையடுத்து, இரு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
மதுராந்தகம் தொகுதியில் தவெக, திமுக, அதிமுக, நாம் தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் உட்பட 27 பேரும், தாராபுரத்தில் 22 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். முதல்வர் விஜய் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள், திமுக தலைவர் ஸ்டாலின், உதயநிதி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கம்யூனிஸ்ட் தலைவர்கள் உள்ளிட்டோர் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. மதுராந்தகத்தில் 85.90 சதவீதமும், தாராபுரத்தில் 80.31 சதவீத வாக்குகளும் பதிவாகின. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை தொடங்கியது. தாராபுரம் தொகுதியில் முதல் 4 சுற்றுகளில் அதிமுக வேட்பாளர் பானுமதி முன்னிலையில் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 23 சுற்றுகள் முடிவில் தவெக வேட்பாளர் சத்தியபாமா, 66,841 வாக்குகள் பெற்று, 9,471 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை திமுக வேட்பாளர் சுகன்யாவும், மூன்றாவது இடத்தை அதிமுக வேட்பாளர் பானுமதியும் பெற்றனர்.
மதுராந்தகம் தொகுதியில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் 74,048 வாக்குகள் பெற்று, 20,040 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இரண்டாம் இடத்தை திமுக வேட்பாளர் பரந்தாமனும், மூன்றாவது இடத்தை அதிமுகவின் கணிதா சம்பத்தும் பெற்றனர்.
இதேபோல, புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்தும், மேற்கு வங்கத்தின் ரெஜிநகர், நந்திகிராம் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களும் வெற்றி பெற்றுள்ளனர். இடைத்தேர்தல் நடந்த 5 தொகுதிகளிலும் ஆளுங்கட்சியே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.