ஈரோடு:
ஈரோடு காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் தீபாவளி கதர், கிராம தொழில் பொருள்கள் விற்பனையை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.மாவட்டத்தில் இந்தாண்டு கதர் பொருள்கள் விற்பனைக்கு ரூ.4.06 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.69.11 லட்சம் மதிப்பிலான கதர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டன.
கதர் பருத்தி, பாலியஸ்டர், பட்டு ரகங்களுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கதர் பருத்தி, பட்டு துணிகள், ஆயத்த ஆடைகள், துண்டுகள், காலணிகள், ஊதுபத்தி, சந்தனப் பொருள்கள், குளியல் சோப்புகள், ஷாம்பு உள்ளிட்ட பல்வேறு பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
தற்போது, பாடி வாஷ், டிஷ் வாஷ் உள்ளிட்ட புதிய பொருள்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், சத்துணவு பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கதர் துணிகளை கடனாகப் பெற்று, தொகையை 10 மாதத் தவணைகளில் செலுத்தும் வசதி வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் செயல்படும் இரு கதர் உற்பத்தி நிலையங்களால், 60 பெண் நூற்பாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. மேலும், 25 நெசவாளர்கள் நேரடியாகவும், சுமார் 125 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். 2025-26ம் ஆண்டில் மாவட்டத்தில் ரூ.2.50 கோடி மதிப்பிலான கதர், கிராமத் தொழில் பொருள்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன என ஆட்சியர் தெரிவித்தார்.