ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு, திருச்சிக்கு வருவதற்கான விமானங்களின் கட்டணம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டெல்லியில் இருந்து திருச்சிக்கு வருவதற்கான விமானக் கட்டணம் ரூ.11,066-ல் இருந்து ரூ.36,985-ஆக அதிகரித்துள்ளது. இது 234 சதவீத உயர்வாகும்.
சனி, ஞாயிறு வார விடுமுறையுடன், ஆயுத பூஜையை முன்னிட்டு திங்கள், செவ்வாய் ஆகிய நாட்களிலும் விடுமுறை கிடைப்பதால், வெளியூர்களில் பணிபுரிபவர்கள் சொந்த ஊருக்குத் திரும்பத் திட்டமிட்டுள்ளனர். இதனால், வரும் 17-ம் தேதி திருச்சிக்கு வரும் விமானங்களில் பயணிகள் தேவை அதிகரித்து, கட்டணமும் உயர்ந்துள்ளது.
சென்னையில் இருந்து திருச்சிக்கு வருவதற்கான விமானக் கட்டணம் ரூ.5,717-ல் இருந்து ரூ.9,818-ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் 71.7 சதவீதம் கட்டணம் அதிகரித்துள்ளது.
பெங்களூரு – திருச்சி வழித்தடத்தில் ரூ.4,823-ஆக இருந்த கட்டணம் ரூ.9,494 ஆகவும் ஹைதராபாத் – திருச்சி வழித்தடத்தில் ரூ.8,467 ஆக இருந்த கட்டணம் ரூ.11,103 ஆகவும் அதிகரித்துள்ளது.
டெல்லி – திருச்சி வழித்தடத்தில் மட்டும் கட்டணம் ரூ.25,919 அதிகரித்து, ரூ.36,985-ஆக உயர்ந்துள்ளது. முந்தைய கட்டணத்துடன் ஒப்பிடுகையில், இது 234.2 சதவீத உயர்வாகும்.
கடைசி நேரத்தில் முன்பதிவு செய்வோர் அதிக செலவைச் சந்திக்க நேரிடும் என்பதால், பயணிகள் முன்கூட்டியே கட்டணங்களை ஒப்பிட்டு முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.