தமிழகத்தை 2036-ம் ஆண்டுக்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்தும் இலக்கை எட்டுவதில், முக்கியப் பங்காற்றும் நகரங்களில் ஒன்றாக திருச்சி அடையாளம் காணப்பட்டுள்ளது. சேலம், கோவை, மதுரை, ஓசூர், தூத்துக்குடி ஆகிய நகரங்களுடன் திருச்சியையும் முக்கிய முதலீட்டு மையமாக ஜேஎல்எல் (JLL) நிறுவனத்தின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கிரெடாய் அமைப்பின் மாநில மாநாடான 'கிரெடாய் ஸ்டேட்கான் 2026' நிகழ்வுக்காகத் தயாரிக்கப்பட்டுள்ள இந்த அறிக்கை, தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியில் சென்னையைத் தாண்டிய நகரங்களின் பங்களிப்பையும், அங்கு உருவாகும் முதலீட்டு வாய்ப்புகளையும் முன்னிலைப்படுத்துகிறது.
மத்திய தமிழகத்தின் முக்கியப் போக்குவரத்து மற்றும் தொழில் மையமாக விளங்கும் திருச்சியில், பொறியியல் உற்பத்தி, கனரகத் தொழில்கள், கல்வி நிறுவனங்கள், சேவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நகரம் ஏற்கெனவே முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தற்போது தொழில் பூங்காக்களின் விரிவாக்கம், புதிய தொழில் முதலீடுகள், சாலை மற்றும் ரயில் இணைப்புகளை மேம்படுத்தும் திட்டங்கள் திருச்சியின் எதிர்கால வளர்ச்சிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கின்றன.
கூடுதல் வாய்ப்புகள்...
சர்வதேச விமானப் போக்குவரத்து இணைப்பு, மணப்பாறை சிப்காட் தொழில் பூங்கா, பஞ்சப்பூரில் உருவாகி வரும் போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் போன்றவை முழுமையாக முன்னேற்றம் அடையும்போது, திருச்சியைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகும் சாத்தியம் உள்ளது.
1.5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை எட்டுவதற்கு, முக்கிய நகரங்களில் மட்டுமின்றி இரண்டாம் நிலை நகரங்களிலும் தொழில் முதலீடுகளைப் பரவலாக்குவது அவசியமாகிறது. அந்த வகையில், திருச்சியின் தொழில்துறை அடித்தளம், போக்குவரத்து வசதிகள் மற்றும் பிராந்திய இணைப்புகள் எதிர்கால முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியக் காரணிகளாக அமையலாம்.
சென்னையை மையமாகக் கொண்ட வளர்ச்சியிலிருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்தும் முயற்சியில், திருச்சியும் முக்கிய இடத்தைப் பெறுகிறது என்பதையே ஜேஎல்எல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள நகரங்களின் பட்டியல் உணர்த்துகிறது.