புதிய வளர்ச்சி வங்கி வெளியிடும் மகாராஜா ரூபாய் பத்திரங்களின் வட்டிக்கு, இந்தியாவில் வசிப்பவர்கள் மற்றும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களிடம் மூலத்தில் வரி பிடித்தம் செய்யத் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய நேரடி வரிகள் வாரியம் அக்டோபர் 19-ம் தேதி வெளியிட்ட அறிவிக்கையின்படி, இந்தச் சலுகை 2026–27 வரி ஆண்டு மற்றும் அதற்குப் பிந்தைய ஆண்டுகளுக்கும் பொருந்தும். வருமான வரிச் சட்டம், 2025-ன் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இந்தியாவுக்குள் ரூபாய் மதிப்பில் வெளியிடப்படும் கடன் பத்திரங்களே மகாராஜா பத்திரங்கள். இவற்றின் மூலம் திரட்டப்படும் நிதி, உள்ளூர் நாணயத்தில் திட்டங்களுக்கு நிதியளிக்க உதவும். இதனால் கடன் பெறுவோருக்கான அந்நியச் செலாவணி ஏற்றத்தாழ்வு அபாயம் குறையும்.
வட்டி வழங்கும்போது வரி பிடித்தம் செய்யப்படாததால், தகுதியுள்ள முதலீட்டாளர்களுக்கு முழு வட்டித்தொகையும் கிடைக்கும். இருப்பினும், இந்த அறிவிப்பு மூலத்தில் வரி பிடித்தத்திலிருந்து அளிக்கப்படும் விலக்கைக் குறிக்கிறது; வட்டி வருமானத்துக்கான முழுமையான வருமானவரி விலக்காக இதனைக் கருதக்கூடாது.
பத்திரதாரர்கள் மற்றும் வட்டிப் பரிவர்த்தனைகள் தொடர்பாக சட்டத்தில் கோரப்பட்ட தகவல்களை புதிய வளர்ச்சி வங்கி சமர்ப்பிக்க வேண்டும். அரசிதழில் வெளியிடப்பட்ட நாளிலிருந்து அறிவிக்கை அமலுக்கு வந்துள்ளது. இந்திய மூலதனச் சந்தையை வலுப்படுத்துவதும் வங்கியின் ரூபாய் நிதித் திரட்டலை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.