தெற்கு ரயில்வேயில் புதிய ரயில் பாதைகள் அமைத்தல், இரட்டைப் பாதைகள் மற்றும் அகலப் பாதை மாற்றம் உள்ளிட்ட உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு 2026–27 நிதியாண்டில் மொத்தம் ரூ.1,283.61 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புதிய ரயில் பாதைத் திட்டங்களுக்கு ரூ.499.96 கோடியும், இரட்டைப் பாதைத் திட்டங்களுக்கு ரூ.342.60 கோடியும், அகலப் பாதை மாற்றப் பணிகளுக்கு ரூ.441.05 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதிய ரயில் பாதைத் திட்டங்களில் திண்டிவனம் – நகரி (179.20 கி.மீ.) திட்டத்துக்கு ரூ.334.70 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – கூடுவாஞ்சேரி திட்டத்துக்கு ரூ.100 கோடியும், மொரப்பூர் – தருமபுரி திட்டத்துக்கு ரூ.44.50 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.மதுரை – தூத்துக்குடி (அருப்புக்கோட்டை வழியாக) திட்டத்துக்கு ரூ.12.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 91.05 கி.மீ. தொலைவிலான ஈரோடு – பழனி புதிய ரயில் பாதைத் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இரட்டைப் பாதை மற்றும் கூடுதல் பாதைகள் அமைக்கும் பணிகளுக்கு ரூ.342.60 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்திப்பட்டு – கும்மிடிப்பூண்டி இடையே 3, 4-வது பாதைகள் அமைக்க ரூ.120 கோடியும், சென்னை கடற்கரை – சென்னை எழும்பூர் இடையிலான பாதைப் பணிகளுக்கு ரூ.94.58 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன.
செங்கல்பட்டு– விழுப்புரம் மற்றும் தாம்பரம் – செங்கல்பட்டு 3-வது பாதைத் திட்டங்களுக்கு ரூ.38 கோடியும், அரக்கோணம் யார்டில் 3, 4-வது பாதை இணைப்புப் பணிகளுக்கு ரூ.36.30 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும், சேலம் – மேக்னசைட் சந்திப்பு – ஓமலூர் திட்டத்துக்கு ரூ.10.72 கோடி, ஓமலூர் – மேட்டூர் அணை திட்டத்துக்கு ரூ.6.71 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அகலப் பாதை மாற்றம்
அகலப் பாதை மாற்றத் திட்டங்களுக்கு ரூ.441.05 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மயிலாடுதுறை – திருவாரூர் – காரைக்குடி, மன்னார்குடி – பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை உள்ளிட்ட வழித்தடப் பணிகளுக்கு மொத்தம் ரூ.220 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மதுரை – போடிநாயக்கனூர் திட்டத்துக்கு ரூ.72.52 கோடியும், திருச்சிராப்பள்ளி – நாகூர் – காரைக்கால் திட்டத்துக்கு ரூ.70.62 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளன. கடலூர் – சேலம் (விருத்தாசலம் வழியாக), சின்னசேலம் – கள்ளக்குறிச்சி திட்டங்களுக்கு ரூ.53.80 கோடியும், திண்டுக்கல் – பொள்ளாச்சி – பாலக்காடு திட்டத்துக்கு ரூ.18.62 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.