சென்னை:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் நடப்பு கல்வியாண்டில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.இதையொட்டி, இதுவரை பேருந்து பயண அட்டைக்கான விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் தகவல்களை பள்ளிகள் அக்டோபர் 15-ம் தேதிக்குள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, மாணவர்களின் சுயவிவர விவரங்கள், புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை குறிப்பாக, புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களின் விவரங்களை விடுபடாமல் பதிவு செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு பேருந்து பயண அட்டை தேவையா அல்லது தேவையில்லையா என்பதையும் எமிஸ் தளத்தில் குறிப்பிட வேண்டும். இதனை, பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில், பேருந்து பயண அட்டை தேவைப்படும் மாணவர்களின் விவரங்களைத் தொகுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால், பயண அட்டை பெற வேண்டிய மாணவர்களின் தகவல்களை பள்ளிகள் விடுபடாமல் பதிவு செய்வது முக்கியமாகும். ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்ட மாணவர்களின் தகவல்களில் மாற்றம் அல்லது திருத்தம் தேவைப்பட்டால், அவற்றையும் பள்ளிகள் சரிபார்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 15-ம் தேதி கடைசி நாள் என்பதால், இதுவரை விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படாத மாணவர்களின் தகவல்களை பள்ளிகள் விரைந்து பதிவேற்றம் செய்து, பதிவுகளை சரிபார்த்து உறுதி செய்ய பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.