நாட்டில் நெரிசல் மிகுந்த 7 முக்கிய வழிதடங்களில், ரயில்பா தைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணியில் ரயில்வே தீவிரமாக களமிறங்கியுள்ளது.
சென்னை-டெல்லி, டெல்லி-ஹவுரா (கொல்கத்தா), சென்னை-மும்பை, மும்பை-டெல்லி, ஹவுரா-சென்னை, மும்பை-ஹவுரா, டெல்லி-கவுகாத்தி ஆகிய 7 வழித்தடங்களில் மட்டுமே அதிக பயணிகள், சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த நெரிசலான வழித்தடங்களில் 11,000 கி.மீ. நீள ரயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டின் மொத்த ரயில்பாதையில் 41சதவீதமாகும். எனினும் நாட்டில் இயங்கும் ரயில்களில் 16 சதவீத ரயில்கள் மட்டுமே இந்த வழித்தடத்தில் இயக்கப்படுகின்றன.
இதற்கு காரணம் இந்த 7 வழித்தடங்களிலும் இப்போது இருவழி ரயில்பாதைகளாக உள்ளன. சில தடங்களில் 3 வழிப்பாதையும், சில இடங்களில் 4 வழிப்பாதையும் இருக்கிறது.அது மொத்த வழித்தடத்தில் 7சதவீதம் கூட இல்லை.
தற்போது, பெருகி வரும் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துக்கு இந்த வழித்தடங்கள் போதுமானதாக இல்லை. இந்த வழித்தடங்களில் முதல்கட்டமாக குறைந்தது 4 வழி ரயில்பாதைகளாக அமைக்கும் பணிகளை ரயில்வே தொடங்கியுள்ளது.
ஏற்கனவே 3, 4வது பாதைகள் உள்ள இடங்களில் கூடுதல் பாதைகள் அமைப்பது இந்த வழித்தடங்களை, பலப்பாதை வழித்தடங்களாக மாற்றப்பட உள்ளன.
இதன் தொடர்ச்சியாக 4 மாநிலங்களில் 410 கி.மீ. நீளத்துக்கு கூடுதல் பாதை அமைக்க ரயில்வே அமைச்சகம் ரூ.9,450 கோடி ஒதுக்கியுள்ளது.
இவற்றில், கும்மிடிபூண்டி-கூடூர் வரை 90 கி.மீ. நீளத்துக்கு 3, 4-வது, அரக்கோணம்-ரேணிகுண்டா இடையே 77 கி.மீ. நீளத்துக்கு 3,4 வது ரயில்பாதை பணிகளும் அடங்கும்.
இந்த 2 வழித்தடங்களில் மும்பை வழித்தடத்தில் தமிழ்நாட்டில் சென்னை-அரக்கோணம் வரை 70 கிமீ நீளத்துக்கு ஏற்கனவே 4 வழி ரயில்பாதைகள் உள்ளன. இந்த வழித்தடத்தில் மும்பை-கல்யாண் வரை 50 கிமீ நீளத்துக்கு 4 வழிப்பாதைகள் உள்ளன.
அதேபோல, டெல்லி, கொல்கத்தா வழித்தடங்களில் சென்னை கடற்கரை-அத்திப்பட்டு வரை 4 வழி ரயில்பாதைகள் உள்ளன. கூடவே அத்திப்பட்டு-கும்மிடிபூண்டி இடையே 3,4 ரயில் பாதைகள் விரைவில் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ரேணிகுண்டா-கடப்பா இடையே 125 கிமீ நீளத்துக்கும், கூடூர்-நெல்லூர் இடையே 39 கிமீ நீளத்துக்கும் 3,4-வது ரயில்பாதைகள் அமைப்பதற்கான அறிவிப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது வெளியாக உள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, "இந்த 7 நெரிசலான வழித்தடங்களுக்கும் 4 அல்லது அதற்கு மேற்பட்ட பலப்பாதை வழித்தடங்களாக 2036க்குள் மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றனர்.