இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த செவிலியர்கள், தங்களுக்கு மாதம் ரூ.45,000 ஊதியம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
பணி நிரந்தரம், பணிப் பாதுகாப்பு, நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் உள்ள துணை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டிப்ளமோ, பி.எஸ்.சி. நர்சிங் முடித்த 2,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் இதில் பங்கேற்றனர்.
இதுகுறித்து சுகாதாரப் பணியாளர்கள் சங்க மாநிலத் தலைவி சுந்தரி கூறியதாவது:
தமிழ்நாட்டில் உள்ள 4,848 நல்வாழ்வு மையங்களில் இடைநிலை சுகாதார பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். கர்ப்பகாலம் மற்றும் பிரசவ சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நலச் சேவைகள், குடும்ப நலம், கருத்தடை மற்றும் பேறுகால சேவைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். வரும் காலங்களில் நல்வாழ்வு மையங்களில் தரமான மருத்துவச் சேவைகள் வழங்கப்பட உள்ளதால், இடைநிலை சுகாதாரப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்போம். தற்போது மாத ஊதியமாக ரூ.21,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. பல்வேறு சுகாதாரச் சேவைகளைத் தடையின்றி வழங்கும் சுகாதாரப் பணியாளர்களுக்கு இந்தத் தொகை குடும்பத்தை நடத்தப் போதுமானதாக இல்லை. மாத ஊதியத்தை ரூ.45,000-ஆக உயர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.