கூட்டுறவு அங்காடிகளில் சன்னரக அரிசி கிலோ ரூ.30-க்கு விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஒரு மணி நேரத்திலேயே அரிசி தீர்ந்துவிட்டதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் விலைவாசி உயர்வு குறித்து உணவுத் துறை அமைச்சர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசிக்கொண்டிருப்பது கண்டனத்திற்குரியது.அரிசி விலை உயர்வைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டுறவு அமுதம் அங்காடிகளில் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனையை அமைச்சர்கள் தொடங்கி வைத்த ஒரு மணி நேரத்திலேயே அரிசி தீர்ந்துவிட்டதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து தேவையற்ற கருத்துகளைக் கூறி மக்களைத் திசைதிருப்புவதைக் கைவிட்டுவிட்டு, கூட்டுறவு அங்காடிகளில் கிலோ ரூ 30-க்கு விற்பதாக அறிவித்த சன்னரக அரிசியை போதுமான அளவு இருப்பு வைத்து விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.