Search

Search

Newsletter image

Subscribe to the Newsletter

Join 10k+ people to get notified about new posts, news and tips.

Do not worry we don't spam!

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

சம்பா சாகுபடியும் சாத்தியமில்லை: டெல்டா மாவட்டங்களில் நீரின்றி கருகும் குறுவைப் பயிர்கள்

சம்பா சாகுபடியும் சாத்தியமில்லை: டெல்டா மாவட்டங்களில் நீரின்றி கருகும் குறுவைப் பயிர்கள்

குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

பகிரவும் WhatsApp Facebook

மேட்டூர் அணையில் 29.60 டிஎம்சி மட்டுமே நீர் இருப்பு உள்ள நிலையில், அணைக்கான நீர்வரத்தும் 1,577 கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள குறுவைப் பயிர் கருகும் நிலையில் இருப்பதுடன், சம்பா சாகுபடிக்கும் வாய்ப்பில்லாத நிலை ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், திருச்சி, கரூர் ஆகிய 8 மாவட்டங்களை உள்ளடக்கிய, 28 லட்சம் ஏக்கர் பரப்பு கொண்ட காவிரி டெல்டா பாசனப் பகுதியில் நெல் உட்பட 33 லட்சம் டன் உணவு தானியங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. 90 முதல் 120 நாட்கள் வரை நெல் சாகுபடி செய்யப்படும் பருவங்கள் நவரை, சொர்ணவாரி, கார், குறுவை, பின்தாளடியாகும். 120 முதல் 140 நாட்கள் வரை பயிரிடப்படும் பருவத்தை முன்சம்பா, சம்பா, பின்சம்பா, தாளடி/பிசாணம், பின் பிசாணம் என்று அழைக்கின்றனர்.
இதில் சம்பா பருவ சாகுபடி தென்மேற்குப் பருவமழையையும், குறுவைப் பருவ சாகுபடி வடகிழக்குப் பருவ மழையையும் சார்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து காவிரியில் திறக்கப்படும் நீர், டெல்டா பாசனத்துக்கான ஆதாரமாக விளங்குகிறது. குறுவை, சம்பா, தாளடி சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

எனினும், கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் நீர், மழைபொழிவு, அணை நீர் இருப்பு காரணங்களால் நீர் திறப்பு தேதி மாறுபட்டு வருகிறது. மேட்டூர் அணை கட்டப்பட்டு 93 ஆண்டுகளான நிலையில் ஜூன் 12-ல் 20 முறையும், முன்னதாக 11 முறையும், தாமதமாக 61 முறையும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு ஜூன் 12-ல் அணை நீர்மட்டம் 79.56 அடி மட்டுமே இருந்ததால் தண்ணீர் திறக்கப்படவில்லை.
ஆகஸ்ட் 1-ல் கபினியில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது. இதையடுத்து, செப். 1-ம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் குறுவை சாகுபடி மட்டுமல்ல, சம்பா சாகுபடியும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது.
சம்பா சாகுபடிக்கு செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை, சாகுபடி தொடங்கும் காலத்தைப் பொறுத்து 140 முதல் 160 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். வடகிழக்குப் பருவமழை இயல்பான அளவில் பெய்தால் 50 முதல் 60 டிஎம்சி ண்ணீர் கிடைக்கும். அத்தகைய சூழலில் 100 முதல் 110 டிஎம்சி நீர் மேட்டூர் அணையில் இருந்துதான் விடுவிக்கப்பட வேண்டும். ஆனால், தற்போதைய சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை.

செப். 22-ம் தேதி வரை கர்நாடகம் 113.33 டிஎம்சி நீரை வழங்கியிருக்க வேண்டும். ஆனால், 43 டிஎம்சி மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள 70 டிஎம்சி நீர் கிடைக்குமா என்பது கேள்விக்குறிதான். விவசாயிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: காவிரிப் பாசன மாவட்டங்களில் 14 லட்சம் ஏக்கரில் சம்பா, 4 லட்சம் ஏக்கரில் தாளடி என 18 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படும். காவிரியில் தண்ணீர் திறக்கப்படாத நிலையில் 40 சதவீத பரப்பில் சாகுபடி நடக்க வாய்ப்பில்லை. அந்த நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்படாத நிலையில், தற்போது சம்பா சாகுபடியும் செய்யப்படவில்லை.

மீதமுள்ள 60 சதவீத பரப்பில் நிலத்தடி நீரை ஆதாரமாகக் கொண்டு சம்பா அல்லது தாளடி சாகுபடி செய்ய முடியும். இதற்கு பிப்ரவரி மாதம் வரை மழை பெய்யும் நாட்களைத் தவிர, மற்ற நாட்களில் தடையற்ற மும்முனை மின்சாரம் தேவை. ஆனால், சில வாரங்களாக மின் தடை நீடிக்கிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 5.28 லட்சம் ஏக்கரில் விவசாயிகள் குறுவை சாகுபடி மேற்கொண்டனர். மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்த சில நாட்களிலேயே கல்லணையில் இருந்து பிரியும் காவிரி மற்றும் கிளை ஆறுகளில் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளி என்ற அடிப்படையில், முறைப்பாசன முறையில் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு, திருப்பந்துருத்தி, கருப்பூர், அம்மன்பேட்டை, ஒரத்தநாடு, மேலஉளூர், தெக்கூர், திருவாரூர் மாவட்டம் நன்னிலம், மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம் மற்றும் நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 1.50 லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருகின்றன.
தஞ்சாவூர் 3.37 லட்சம் ஏக்கர், திருவாரூரில் 3.75 லட்சம், நாகையில் 1.62 லட்சம், மயிலாடுதுறை மாவட்டத்தில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம் 10.55 லட்சம் ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி எதிர்பார்க்கப்படுகிறது. ஆழ்குழாய்க் கிணறு வசதியுள்ள விவசாயிகள் மட்டுமே சம்பா சாகுபடியைத் தொடங்கியுள்ளனர். காவிரியில் தொடர்ந்து நீர் திறக்க வேண்டிய அவசியம் உள்ளது.

கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வரும் தண்ணீரை கணக்கிடாமல், தென்மேற்குப் பருவ மழையை நம்பி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். ஆழ்குழாய்க் கிணற்று நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கி, பயிர்களைக் கருகாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு விவரம்

2018, 2019 - ஜூலை 19
2020-ல் ஜூன் 12
2021 - ஜூன் 12
2022 - மே 24
2023, 2025 - ஜூன் 12
2026 - செப்டம்பர் 1

கர்நாடக அணைகளின் நிலவரம் (நீர்மட்டம் மற்றும் நீர் இருப்பு)

கிருஷ்ணராஜசாகர் – 102.30 அடி - 24.67 டிஎம்சி
கபினி – 49.19 -10.82 டிஎம்சி
ஹேரங்கி – 119.44 - 5.79 டிஎம்சி
ஹேமாவதி – 87.4 – 15.40 டிஎம்சி

முந்தைய செய்தி
ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள்: ஆலோசனையில் முக்கிய முடிவு
அடுத்த செய்தி
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய நுழைவுக் கட்டணம் உயர்வு - வலுக்கும் எதிர்ப்பு

தொடர்புடைய செய்திகள்