எல்நினோவால் பகல் நேரங்களில் கடுமையான வெயில் தொடர்வதால் முலாம் பழம், தர்பூசணி விற்பனை திருச்சியில் அதிகரித்துள்ளது.
எல்நினோ பாதிப்பால் திருச்சியில் பருவமழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் தொடர்வதால் ஏராளமான தென்னை மரங்கள் பட்டு போனதோடு, நோய்தாக்கம் ஏற்பட்டு காய்ப்பு குறைந்தது. காய்த்திருந்த சில மரங்களிலும் இளநீர் சிறுத்து தண்ணீர் குறைந்தது. இதனால் திருச்சிக்கு பொள்ளாச்சி இளநீர் விற்பனைக்கு கொண்டுவந்து ரூ.100க்கு விற்கப்படுகிறது. மேலும், வெயிலின் தாக்கத்தை குறைக்க உதவும் முலாம் பழம், தர்பூசணி உள்ளிட்டவற்றின் விற்பனையும் அதிகரித்துள்ளது. ஏப்ரல் மாதம் 4 கிலோ முலாம்பழம் ரூ.100க்கு கூவி கூவி விற்கப்பட்ட நிலையில் தற்போது காந்தி மார்க்கெட்டில் மொத்த விற்பனையில் கிலோ ரூ.40க்கும், சில்லறையில் பழக்கடைகளில் கிலோ ரூ.50 வரை விற்கப்படுகிறது. அதேபோல் தர்பூசணி கிலோ ரூ. 25க்கு விற்கிறது.
பழ கமிஷன் மண்டி உரிமையாளர் எம்.சங்கர் கூறுகையில், ‘முலாம் பழம் தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்துள்ளதால் கிலோ ரூ.40க்கு விற்கிறது. ஈரோடு மாவட்டம் அந்தியூர், புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் இருந்து காந்தி மார்க்கெட்டுக்கு தினமும் 18 டன் முலாம் பழம், தர்பூசணி விற்பனைக்கு வருகிறது. வெயில் தாக்கம் தொடர்வதால் தேவை அதிகரித்து வருகிறது, பருவமழை பெய்தால் தேவை குறைந்து விலையும் குறையும்’ என்றார்.