ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் விரலி மஞ்சள் குவிண்டாலுக்கு அதிகபட்சமாக ரூ.23,303-க்கு விற்பனையானது. சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதுடன், சந்தைக்கு வரும் மஞ்சளின் வரத்தும் சரிந்துள்ளதால் கடந்த சில வாரங்களாக விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்தனர்.
விரலி மஞ்சளின் அதிகபட்ச விலை அக்டோபர் 13-ம் தேதி குவிண்டாலுக்கு ரூ.20,799-ஆக இருந்தது. 14-ம் தேதி ரூ.22,989-ஆக உயர்ந்த நிலையில், வியாழக்கிழமை ரூ.23,303-ஐ எட்டியது. ஏப்ரல் மாதத்தில் சுமார் ரூ.14,000 என்ற அளவில் இருந்த விலையுடன் ஒப்பிடும்போது, தற்போது கணிசமாக உயர்ந்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் சாகுபடி பரப்பளவு கணிசமாகக் குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. முன்பு 12,000 ஹெக்டேருக்கும் அதிகமாக இருந்த சாகுபடி பரப்பளவு, நடப்பாண்டில் சுமார் 5,500 ஹெக்டேராகக் குறைந்துள்ளது. இதனால், சாகுபடி பரப்பளவு சுமார் 52 சதவீதம் சரிந்துள்ளது. போதிய மழை இல்லாததாலும், பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காததாலும் விவசாயிகள் பலர் மாற்றுப் பயிர்களைச் சாகுபடி செய்துள்ளனர்.
வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.14,089 முதல் ரூ.23,303 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.13,169 முதல் ரூ.20,009 வரையிலும் விற்பனையானது.
பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விரலி மஞ்சள் ரூ.16,902 முதல் ரூ.23,211 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.15,477 முதல் ரூ.20,030 வரையிலும் விற்பனையானது. ஈரோடு மஞ்சள் வணிகர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் விரலி மஞ்சள் ரூ.15,551 முதல் ரூ.22,899 வரையிலும், கிழங்கு மஞ்சள் ரூ.14,000 முதல் ரூ.20,049 வரையிலும் விற்பனையானது.
கடந்த 2010-ஆம் ஆண்டில் குவிண்டால் மஞ்சள் ரூ.20,000 என்ற அளவை எட்டியிருந்த நிலையில், தற்போது ஈரோடு சந்தையில் விரலி மஞ்சள் ரூ.23,303-க்கு விற்பனையானது.