புதுக்கோட்டை மாவட்டத்தில் 77,864 விவசாயிகளின் வங்கிக் கணக்கில் பிரதமரின் கவுரவ நிதியுதவி வரவு வைக்கப்படுவதாக மாவட்ட வருவாய் அலுவலர் ஹெச்.எம்.குழந்தைசாமி தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட கவிவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பிரதம மந்திரி விவசாயிகளின் கவுரவ நிதித் திட்டத்தின்கீழ் (PMKISAN) மாவட்டத்தில் 77,864 விவசாயிகள் பதிவு செய்து, பயனடைந்து வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு ஒருமுறை தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 845.32 மி.மீ. ஆனால், அக்டோபர் 13-ம் தேதி வரை 368.10 மி.மீ அளவு மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை காலத்தில் இயல்பான அளவுக்கு அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் மாதம் வரை நெல் 18,468 எக்டேர், சிறுதானியங்கள் 1,206 எக்டேர், பயறுவகைப் பயிர்கள் 449 எக்டேர், எண்ணெய் வித்துக்கள் 3,542 எக்டேர், கரும்பு 1,062 எக்டேர், பருத்தி 17 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் 534 டன் சான்று பெற்ற நெல் விதைகளும், 7 டன் சிறுதானிய விதைகளும், 44 டன் பயறு விதை, 43 டன் நிலக்கடலை, 4 டன் எள் விதைகள் இருப்பில் உள்ளன.
யூரியா 8,434 டன், டிஏபி 2,574 டன், பொட்டாஷ் 1,420 டன், காம்ப்ளக்ஸ் உரங்கள் 5,450 டன்னும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் உர உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.