எல்-நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய 7 நிபுணர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சூப்பர் எல்-நினோ பாதிப்புகளை சமாளிக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழுவை அமைக்கக் கோரி, வழக்கறிஞர் அருளரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர், 160 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த சூப்பர் எல்-நினோ தற்போது உருவாகியுள்ளது.
அப்போது ஏற்பட்ட பாதிப்புகளைவிட, தற்போது பாதிப்பு கடுமையாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏழை மக்கள் பாதிக்காத வகையில், உணவு தானியங்களை இருப்பு வைப்பது அவசியம் என்பதால் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
தமிழக அரசுத் தரப்பில், எல்-நினோ பாதிப்பு குறித்து ஆய்வு செய்து, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பரிந்துரை வழங்க 7 நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்து கடந்த ஜுலை மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டது.