சென்னை சௌகார்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் லுனாவட்ஸ் புல்லியன் நிறுவனம் தங்கம், வெள்ளி கட்டி வர்த்தகத்தை எளிமைப்படுத்தி, நாடு முழுவதும் தனது சந்தை இருப்பை விரிவுபடுத்தும் நோக்கில், நேரடி விலை நிலவரம், தங்க முன்பதிவு உள்ளிட்ட வசதிகளுடன் புதிய டிஜிட்டல் தளத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அடுத்த ஓராண்டுக்குள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நான்கு புதிய அலுவலகங்களைத் திறக்கவும் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சுஸ்வானி ஜுவல்லர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஜிதேந்திர ஜி படோலா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். தென்னிந்திய புல்லியன் சங்கத் தலைவர் சுரபி கே.கார்த்திக், சென்னை மொத்த நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் மற்றும் லட்சுமி ஜுவல்லரியின் நிர்வாக இயக்குநர் அசோக் குமார் ஜெயின் உள்ளிட்ட தங்கம், வெள்ளி மற்றும் நகைத் தொழில் துறையினர் பங்கேற்றனர்.
புதிய டிஜிட்டல் தளத்தின் மூலம் தங்கம், வெள்ளி கட்டி வர்த்தகத்தில் ஈடுபடுவோர் நேரடி விலை மாற்றங்களை அறிந்துகொள்ளவும், தங்கத்தை முன்பதிவு செய்யவும் முடியும். 24 மணி நேரமும் டிஜிட்டல் முறையில் அணுகக்கூடிய வகையில் இந்தத் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் வர்த்தகர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் புல்லியன் விற்பனையாளர்கள் சந்தை நிலவரங்களைக் கண்காணித்து வர்த்தக முடிவுகளை மேற்கொள்ள உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரியில் தனது புல்லியன் வர்த்தகத்தை தொடங்கிய நிறுவனம், இதுவரை 80-க்கும் மேற்பட்ட புல்லியன் விற்பனையாளர்கள், 200 வெள்ளி வர்த்தகர்கள் மற்றும் 500 முதலீட்டாளர்களைக் கொண்ட வலையமைப்பை உருவாக்கியுள்ளது.
நிறுவனத்தின் இயக்குநர் சுனில் குமார் லுனாவட் தலைமையிலான குழு, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி வாடிக்கையாளர் அணுகலை விரிவுபடுத்தவும், தொழில் கூட்டாண்மைகளை வலுப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. டிஜிட்டல் வர்த்தக வசதிகள் மூலம் தங்கம், வெள்ளி வர்த்தகத்தை மேலும் எளிமைப்படுத்துவதுடன், இந்திய அளவில் தனது சந்தை இருப்பை விரிவுபடுத்துவதே நிறுவனத்தின் அடுத்தகட்ட வளர்ச்சித் திட்டமாக உள்ளது.