பல கோடி ரூபாய் அந்நிய செலவாணி ஈட்டி தரும் நாகை மீன்பிடி துறைமுகத்தில் அதிகளவில் குவிந்திருந்த கோழி மீன்களை டன் ரூ.3.50 லட்சத்திற்கு ஏற்றுமதியாளர்கள் வாங்கிச் சென்றனர்.
நாகையில் சுமார் 500 விசைப்படகுகள், 1,000 பைபர் படகுகளை பயன்படுத்தி மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். புயல் எச்சரிக்கை காரணமாக குறைந்த அளவிலான படகுகளே மீன்பிடிக்கச் சென்று கரை திரும்பின. அவற்றில் பெரும்பாலான படகுகளில் கோழி மீன்கள் அதிகளவில் கொண்டு வரப்பட்டு மீன்பிடி துறைமுகத்தில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டன.
கன்டெய்னர் லாரிகளோடு வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த ஏற்றுமதியாளர்கள் டன் கணக்கில் கோழி மீன்களை ஆர்வத்தோடு வாங்கிச் சென்றனர்.
டெட்ராடன் என்ற அறிவியல் பெயர் கொண்ட கோழி மீன்கள், கடல் கோழி அல்லது பேத்தை மீன் என்றும் லெதர் ஜாக்கெட் மீன் என்றும் அழைக்கப்படுகின்றன. இதில் 121 வகை இருப்பதாக அறியப்படுகிறது. டெட்ராடாக்ஸின் என்ற கொடிய விஷம் இவ்வகை மீன்களில் உள்ளதால் அதனை அகற்றி விட்டு சமைக்க வேண்டும்.
இதனால் கோழி மீன்களை பெரும்பாலும் தமிழக மக்கள் சாப்பிடுவது இல்லை. இதன் காரணமாக அவை வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
மீன்களின் பெயர் விலை ஒரு கிலோ
வஞ்சரம் ரூ.750
பாறை ரூ.500
கடல் விறா ரூ.750
சூறை மீன் ரூ.200
பெரிய சீலா ரூ420
சின்ன சீலா ரூ300
சங்கரா ரூ.300
வாவல் சிறியது ரூ.650
வாவல் பெரியது ரூ.1100
இறால் சிறியது ரூ.350
இறால் பெரியது ரூ.550
பால் சுறா ரூ.650
திருக்கை ரூ.250
நெத்திலி ரூ.100- ரூ.300
கனவா ரூ.150-ரூ.300
நண்டு ரூ.500- ரூ.750
திருப்பூரில் மீன் விலை குறைவு
புரட்டாசி மாதம் நிறைவடைந்த நிலையிலும் தற்போது 10 நாள் தசரா கொண்டாட்டம் நடைபெற்று வருவதால் திருப்பூர் மீன் மார்க்கெட் வெறிச்சோடிக் காணப்பட்டது. வரத்து குறைவாக இருந்தபோதிலும், விலையும் கணிசமாகக் குறைந்திருந்தது. இதன்படி, கிலோ ரூ.480-க்கு விற்பனை செய்யப்பட்ட இறால் ரூ.380-க்கும், ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட மத்தி ரூ.100-க்கும், ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்ட பாறை மீன் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.