இந்திய ரியல் எஸ்டேட் சங்கங்களின் கூட்டமைப்பான கிரெடாய் தமிழ்நாடு அமைப்பின் 5-வது ‘ஸ்டேட்கான் 2026’ இரண்டு நாள் மாநாடு சென்னையில் தொடங்கியது. மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான், கட்டுமானத்துறைக்கு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று தெரிவித்தார்.
நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் ஏ.எம்.ஷாஜகான் ‘ஸ்டேட்கான் 2026’ மாநாட்டைத் தொடங்கி வைத்தார். தமிழகத்தின் பொருளாதாரத்தை வரும் 2036-க்குள் 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்தும் தொலைநோக்குப் பார்வையில் ரியல் எஸ்டேட் துறையின் பங்களிப்பு, கட்டுமானத் துறையில் செயற்கை நுண்ணறிவு, ரோபோடிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.
தமிழக ரியல் எஸ்டேட் துறை குறித்த ஜேஎல்எல் நிறுவனத்தின் சிறப்பு அறிக்கை மாநாட்டில் வெளியிடப்பட்டது. மேலும், கிரெடாய் தமிழ்நாடு அமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கில் நீலகிரி, கொடைக்கானல், வேலூர், தஞ்சாவூர் மற்றும் கரூர் ஆகிய 5 புதிய நகர கிளைகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. மாநாட்டின் ஒரு பகுதியாக, கட்டுமானப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்பங்களுக்கான ‘ஃபேர்பில்ட் 2026’ வணிகக் கண்காட்சியும் நடைபெற்றது.
மாநாட்டில் அமைச்சர் ஷாஜகான் பேசுகையில், “தமிழக மக்களின் மாற்றத்துக்கான விருப்பத்தின் பேரில் அமைந்துள்ள இந்த புதிய அரசு, லஞ்சம் மற்றும் ஊழலற்ற ஒரு மாநிலத்தை உருவாக்குவதையே தனது தலையாய நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. முதல்வர் விஜய்யின் இந்த உறுதியான நிலைப்பாடு, ரியல் எஸ்டேட் துறையினர் இதுவரை சந்தித்து வந்த சவால்களுக்கு ஒரு நிரந்தர விடிவாக அமையும். ரியல் எஸ்டேட் துறையில் உலகிலேயே எங்கும் இல்லாத அளவு தொழில் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
அனைவருக்கும் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சொந்த வீடு என்ற கனவை நனவாக்கும் பணியில் அரசுடன் இணைந்து செயல்படும் கட்டுமானத் துறையினருக்கு அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும். ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சிக்காக, திட்டங்களுக்கான அரசு ஒப்புதல்களை பெறுவதை மேலும் எளிமையாக்கி, விரைவாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மாநாட்டில் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, ஒப்புதல்கள் பெறுவதில் உள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காணப்படும். இத்துறை சார்ந்த மகிழ்வான அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகும்.” என்று தெரிவித்தார்.
கிரெடாய் தமிழ்நாடு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் பேசுகையில், “புதிய அரசுக்கும், அதன் இலக்குகளுக்கும்ம் ரியல் எஸ்டேட் துறை முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கும். மாநில அரசின் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதில், ரியல் எஸ்டேட் துறையின் பங்கு அளப்பரியது. தற்போதைய நிலையில் இத்துறை 8 முதல் 9 சதவீத பங்களிப்பை வழங்கி வருகிறது. இதை 12 முதல் 13 சதவீதமாக துரிதப்படுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இந்நிகழ்வில் எஸ்பிஐ வங்கியின் சென்னை வட்ட தலைமை பொது மேலாளர் விவேகானந்த் சவுபே, கிரெடாய் அமைப்பின் தேசிய தலைவராக பொறுப்பேற்க உள்ள ஜி.ராம்ரெட்டி, தென்மாநில துணைத்தலைவர் மெகபூப், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் குகன் இளங்கோ, செயலாளர் ஸ்ரீகுமார் சுவாமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.