ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் ஆகிய சர்க்கரைகளைச் சேர்ப்பதற்கு முழுமையான தடை விதிக்க இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, பச்சிளம் குழந்தைகளுக்கான சில குறிப்பிட்ட உணவுப் பொருட்களில் குறிப்பிட்ட அளவிற்குள் சர்க்கரை சேர்க்க நிறுவனங்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் அனுமதி வழங்கயிருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய திருத்த வரைவின்படி, 6 மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கான பதப்படுத்தப்பட்ட மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களில் எவ்வித சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் இனிப்புகளையும் சேர்க்க முற்றிலும் தடை விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.பச்சிளம் பருவத்திலேயே சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளை குழந்தைகளுக்குப் பழக்குவது, அவர்களை ஆரம்பத்திலேயே இனிப்புச் சுவைக்கு அடிமையாக்குவதுடன், குழந்தைப் பருவ உடல் பருமன், பல் சிதைவு மற்றும் வளர்ந்த பிறகு நீரிழிவு போன்ற பல்வேறு நீண்டகால வாழ்வியல் நோய்களுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இத்தகைய ஆரோக்கியச் சிக்கல்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும், முதல் 6 மாதங்களுக்குத் தாய்ப்பால் மட்டுமே புகட்ட வேண்டும் என்ற சர்வதேச மருத்துவ வழிகாட்டுதலை ஊக்குவிக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வரைவு நெறிமுறைகள் தொடர்பாக உணவு தயாரிப்பு நிறுவனங்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் கருத்துகளைப் பெற 60 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பெறப்படும் பரிந்துரைகளின் ஆய்வுக்குப் பின்னர் இந்த புதிய விதிமுறைகள் நாடு முழுவதும் சட்டப்பூர்வமாக அமலுக்கு வரும் என உணவுப்
பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சட்டம் முழுமையாக நடைமுறைக்கு வரும்போது, பச்சிளம் குழந்தைகளுக்கான உணவு தயாரிப்பில் ஈடுபட்டுள்ள முன்னணி நிறுவனங்கள் தங்களின் உணவு தயாரிப்பு முறைகளில் பெரும் மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும்.