திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் விரைவில் ‘சர்வதேச ஏர் எக்ஸ்பிரஸ் கொரியர் கார்கோ’ சேவை தொடங்கப்படுகிறது. இதனால் சிறிய ரக பார்சல்கள், ஈ-காமர்ஸ் ஆர்டர்களை வெளிநாடுகளுக்கு எளிதாகவும் விரைவாகவும் அனுப்ப முடியும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள சர்வதேச சரக்கு கையாளும் முனையத்தை பயன்படுத்தியே இந்த சேவையை உடனடியாக தொடங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இச்சேவையை விரைவுபடுத்துமாறு திருச்சி எம்பி துரை வைகோ, திருச்சி சுங்கத்துறை ஆணையரிடம் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இந்த திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 7-ல் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் சார்பில் நடத்தப்பட்ட கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. விமானங்களில் வழங்கப்படும் கொரியர் கார்கோ சேவையானது, சிறிய ரக பார்சல்கள், முக்கிய ஆவணங்கள், ஈ-காமர்ஸ் பொருட்களை வேகமாகவும், முன்னுரிமை அடிப்படையிலும் அனுப்பி வைக்கும் பிரத்யேக சேவை. கனரக தொழில்முறை சரக்குகளைப் போலன்றி, இச்சேவையில் 30 கிலோ, 70 கிலோ, விமான நிறுவனங்களின் அனுமதிக்கு ஏற்ப சிறிய எடையுள்ள பார்சல்களை அனுப்ப முடியும்.