விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியங்கள், அவர்களின் சாகுபடி செலவைக் குறைப்பதுடன், வேளாண் துறையைச் சார்ந்த பொருள்கள் மற்றும் சேவைகளுக்கான சந்தையையும் விரிவுபடுத்தி வருகின்றன. குறிப்பாக, வேளாண் இயந்திரங்கள், பதப்படுத்தும் அலகுகள், பாசன உபகரணங்கள், சூரியசக்தி பம்புகள் உள்ளிட்ட துறைகளில் தொழில் வாய்ப்புகள் உருவாகி வருகின்றன.
வேளாண் விளைபொருள்களுக்கு மதிப்புக்கூட்டும் வகையில் 100 பதப்படுத்தும் அலகுகளை அமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தக்காளி, மிளகாய், மஞ்சள், வாழை, மாம்பழம், முருங்கை, சிறுதானியங்கள், தேங்காய் உள்ளிட்ட விளைபொருள்களை பதப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திட்டச் செலவில் 25 சதவீதம் வரை மானியம் வழங்கப்படும் நிலையில், குறிப்பிட்ட பிரிவினருக்கு 35 சதவீதம் வரை மானியம் கிடைக்கிறது. இதனால் விளைபொருள்களை பதப்படுத்தும் சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு வாய்ப்பு அதிகரிக்கிறது.
இயந்திரப் பயன்பாடு அதிகரிப்பு
வேளாண் இயந்திரமயமாக்கலுக்காக ரூ.215.80 கோடி ஒதுக்கப்பட்டு, சுமார் 17,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. மேலும், 130 வாடகை இயந்திர மையங்கள் அமைக்கப்படுகின்றன. விவசாயிகள் அதிக முதலீடு செய்து இயந்திரங்களை வாங்குவதற்கு பதிலாக, தேவைக்கேற்ப வாடகைக்கு பயன்படுத்தும் நிலை உருவாகிறது. இதனால் கிராமப்புறங்களில் இயந்திர வாடகை மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.
சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்துக்கான மானியங்கள் காரணமாக பாசன உபகரணங்களின் பயன்பாடும் அதிகரிக்கிறது. இதேபோல், சூரியசக்தி பம்புகளுக்கான மானியத்தால் சூரியசக்தி சார்ந்த வேளாண் உபகரணங்கள் மற்றும் அவற்றை அமைக்கும் சேவைகளுக்கான தேவையும் உருவாகிறது.
சிறு தொழில்களுக்கு வாய்ப்பு
காளான் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 5 புதிய மாநில உற்பத்தி மையங்களும், 26 மாவட்டங்களில் காளான் வித்து உற்பத்தி அலகுகளும் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் சிறு தொழில்முனைவோருக்கு புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன.
மேலும், விவசாயிகள் விளைவிக்கும் காய்கறிகளை நேரடியாக விற்பனை செய்ய 4,000 நடமாடும் காய்கறி விற்பனை வண்டிகள் அமைக்கும் திட்டமும் உள்ளது.