சென்னை:
வாக்குச்சாவடிக்குப் போவதற்கு முன்னால், உங்களின் கரன்ட் பில்லையும் (மின்சாரக் கட்டணம்), மளிகைக் கடை பில்லையும் பார்த்துவிட்டுப் புறப்படுங்கள் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இடைத்தேர்தல் நடைபெறும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அவர் வெளியிட்டுள்ள பிரச்சார வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது:
நான்கு மாதத்தில் இடைத்தேர்தல் வருவதற்கான காரணம் என்னவென்று வாக்காளர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆளுங்கட்சியில் சேர்ந்தால்தான் மக்களுக்கு நன்மை செய்ய முடியும் என்று சொல்கின்றனர். இது உண்மையென்றால், எல்லா ஆட்சியிலும், எதிர்கட்சி எம்எல்ஏக்கள், ராஜினாமா செய்துவிட்டு, ஆளுங்கட்சியில் சேர்ந்திருக்க வேண்டுமே.
மேலும், திமுக, அதிமுக கூட்டணி அமைக்கப் பார்த்தது என்று இல்லாத ஒரு கதையைச் சொல்லி ஏமாற்றப் பார்க்கிறார்கள்.
பிரச்சாரத்துக்கு வந்த முதல்வர் விஜய், நிறைவேற்றிய தேர்தல் வாக்குறுதிகளைச் சொல்லி வாக்கு கேட்கவில்லை. ஏனென்றால் இந்த ஆட்சி மக்களுக்கு நன்மை செய்ய அமைந்த ஆட்சி அல்ல; மாஃபியா கும்பல்கள் தமிழ்நாட்டைக் கொள்ளையடிக்க அமைந்திருக்கக்கூடிய ஆட்சி.
வாக்குச்சாவடிக்குப் போவதற்கு முன்னால் உங்களின் கரன்ட் பில்லையும், மளிகைக் கடை பில்லையும் பார்த்துவிட்டுப் புறப்படுங்கள். மக்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் ரீல்ஸ் போட்டு, பொய்யான கதைகளைச் செய்தியாக்கி மக்களை ஏமாற்ற முடியும் என்று நினைக்கும் தவெகவுக்கு, இந்த தேர்தலில் ஏமாற்றத்தைத் தர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.