சென்னை
பணி நிரந்தரம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை நவம்பர் 3-க்குள் நிறைவேற்றாவிட்டால் மீண்டும் போராட்டம் தொடரும் என தமிழ்நாடு இடைநிலை சுகாதார பணியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் சங்க செவிலியர்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களுடன் சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது.
சங்க மாநில தலைவி சுகந்தி கூறுகையில், "சுகாதாரத்துறை செயலாளர் எங்களது கோரிக்கை பெரும்பாலும் நிறைவேற்றுவதாக கூறியுள்ளார். இதற்காக நவம்பர் 3 வரை அவகாசம் கேட்டுள்ளார். இதனால், போராட்டத்தை வாபஸ் பெற்று கலைந்து சென்றோம். அரசு எங்களை ஏமாற்றினால், அனைத்து அரசு மருத்துவமனை செவிலியர்களையும் திரட்டி, சென்னையில் போராடுவோம்" என்றார்.