அரிசி, பருப்பு விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் ரூ.1,100-ஆக இருந்த 26 கிலோ எடை கொண்ட சாதாரண ரக புழுங்கல் அரிசி மூட்டை விலை இப்போது ரூ.1,800-ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது, கிலோ ரூ.42-லிருந்து ரூ.70-ஆக அதிகரித்திருக்கிறது. அதேபோல், பொன்னி புழுங்கல் அரிசி மூட்டை விலை ரூ.1,400-லிருந்து ரூ.1,900-ஆகவும், ஆந்திரா மற்றும் கர்நாடகத்திலிருந்து வரும் சோனா மசூரி அரிசி மூட்டை விலை ரூ.1,400-லிருந்து ரூ.2,000 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
விருதுநகர் மொத்த விற்பனை சந்தையில் துவரம் பருப்பு 100 கிலோ மூட்டை விலை ரூ.13,200-லிருந்து ரூ.13,800-ஆக அதிகரித்துள்ளது. நயம் உளுத்தம்பருப்பு 100 கிலோ மூட்டை கடந்த வாரம் ரூ.9,100 முதல் ரூ.9,200 வரை விற்கப்பட்ட நிலையில் இந்த வாரம் மூட்டைக்கு ரூ.1,100 உயர்ந்து, ரூ.10,200 முதல் ரூ.10,400 வரை விற்பனை செய்யப்படுகிறது.
சில்லறை விலையில் ஒரு கிலோ அரிசி ரூ.27 வரையிலும், துவரம் பருப்பு கிலோவுக்கு ரூ.6, உளுத்தம்பருப்பு ரூ.11 வீதமும் உயர்ந்துள்ள நிலையில், அதனால் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அரிசி விலையை கட்டுப்படுத்த அரசு எந்த எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.