தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோவின் செப்டம்பர் காலாண்டு நிகர லாபம் 1.4 சதவீதம் குறைந்து ரூ.3,200.6 கோடியாக பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் இந்நிறுவனம் ரூ.3,246.2 கோடி லாபம் ஈட்டியிருந்தது.
நடப்பு 2026–27 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் 9.1 சதவீதம் உயர்ந்து ரூ.24,752.7 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் வருவாய் ரூ.22,697.3 கோடியாக இருந்தது.
முந்தைய ஜூன் காலாண்டுடன் ஒப்பிடும்போது நிகர லாபம் 4.5 சதவீதம் குறைந்துள்ளது. அதேநேரம், வருவாய் ஒரு சதவீதம் அதிகரித்துள்ளது.
தகவல் தொழில்நுட்ப சேவைப் பிரிவின் வருவாய் 261.15 கோடி டாலராக பதிவாகியுள்ளது. அடுத்த டிசம்பர் காலாண்டில் இப்பிரிவின் வருவாய் 257.1 கோடி முதல் 262.5 கோடி டாலர் வரை இருக்கும் என நிறுவனம் கணித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகள் புதிய வாடிக்கையாளர்களைப் பெறவும், தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்தவும் உதவுவதாக விப்ரோ தலைமைச் செயல் அதிகாரி ஸ்ரீனி பாலியா தெரிவித்துள்ளார்.