இந்த வாரம் இந்திய பங்குச்சந்தைகளின் போக்கை தீர்மானிப்பதில், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், கச்சா எண்ணெய் விலை நிலவரம், ஜியோ ஐபிஓ, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வர்த்தகம் உள்ளிட்டவை முக்கிய பங்கு வகிக்கும் என சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த இரண்டு வாரங்களாக இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்துடன் நிறைவு செய்துள்ளன. குறிப்பாக, ஐடி நிறுவனப் பங்குகளில் ஏற்பட்ட வலுவான எழுச்சி சந்தைக்கு ஆதரவாக அமைந்தது. கடந்த வாரத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 2,256.94 புள்ளிகள் உயர்ந்து 3.11 சதவீத வளர்ச்சியையும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 625.7 புள்ளிகள் உயர்ந்து 2.77 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்தன.
தசரா பண்டிகையை முன்னிட்டு வரும் செவ்வாய்க்கிழமை பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், இந்த வாரம் 4 நாட்கள் மட்டுமே வர்த்தக நாளாக இருக்கும். இந்த வாரம் சந்தை போக்கை தீர்மானிக்கும் காரணிகள் இவை தான்.
சர்வதேச சந்தை நிலவரம்
மேற்கு ஆசியாவில் நிலவும் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மற்றும் சர்வதேச சந்தை நிலவரங்களும் முதலீட்டாளர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படும். இதன் அடிப்படையில் முதலீட்டாளர்களின் முடிவுகளை எடுக்கக் கூடும்.
வங்கி பங்குகள்
கடந்த சனிக்கிழமை வெளியான ஹெச்.டி.எப்.சி., வங்கியின் செப்டம்பர் காலாண்டு ஒருங்கிணைந்த நிகர லாபம் 5.55 சதவீதம் உயர்ந்து ரூ.20,700 கோடியாக உள்ளது. இதே போல் ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 22.28 சதவீதம் அதிகரித்து ரூ.16,333.18 கோடியாக உயர்ந்துள்ளது. ஆக்சிஸ் வங்கியின் நிகர லாபம் 39.4 சதவீதம் வளர்ந்து ரூ.7,704.67 கோடியாக உள்ளது. இதனால் வங்கி சார்ந்த பங்குகள் விலையில் தாக்கத்தை எதிர்ப்பார்க்கலாம்.
ஜியோ ஐபிஓ
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் சேவைப் பிரிவான ஜியோ பிளாட்பார்ம்ஸ் பங்கு வெளியீடு இந்த வாரத்தின் முக்கிய நிகழ்வாக இருக்கும். அக்.21 முதல் 23 வரை நடைபெறும் பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை ரூ.1,065 முதல் ரூ.1,119 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச விலையில் கணக்கிடும்போது, இந்தப் பங்கு வெளியீட்டின் மூலம் சுமார் ரூ.30,213 கோடி திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய பங்கு வெளியீடாக அமையும்.