கச்சா எண்ணெய் விலை உயர்வு, உள்நாட்டிலும் உலக அளவிலும் பணவியல் கொள்கைகள் மேலும் கடுமையாக்கப்படலாம் என்ற அச்சம் காரணமாக வியாழக்கிழமை இந்தியப் பங்குச் சந்தைகள் கடுமையாகச் சரிந்தன. இதனால் முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பு ஒரே நாளில் சுமார் ரூ.10 லட்சம் கோடி குறைந்தது.
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 1,045 புள்ளிகள் (1.44 சதவீதம்) வீழ்ச்சியடைந்து 71,593.24 புள்ளிகளில் முடிவடைந்தது. இது இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலான காலத்தில் பதிவான மிகக் குறைந்த நிறைவு நிலையாகும். வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 1,310.95 புள்ளிகள் சரிந்து 71,327.75 புள்ளிகளைத் தொட்டது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு ரூ.10,01,898.68 கோடி குறைந்து, ரூ.4,60,97,032 கோடியாக இருந்தது.மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரித்த பதற்றத்தால் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 4.25 சதவீதம் உயர்ந்து, பீப்பாய்க்கு 104.5 அமெரிக்க டாலராக அதிகரித்தது. இது இறக்குமதி சார்ந்த பணவீக்கக் கவலைகளை அதிகரித்ததாக சந்தை நிபுணர்கள் தெரிவித்தனர். அமெரிக்காவின் பத்தாண்டு அரசுப் பத்திர வருவாய் விகிதம் 5.3 சதவீதத்துக்கு அருகில் நீடிப்பதும், ரூபாய் மதிப்பு பலவீனமடைவதும் சந்தைக்கு அழுத்தத்தை ஏற்படுத்தின. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் புதன்கிழமை ரூ.6,121.37 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றுள்ளனர்.
இந்த ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 13,627.36 புள்ளிகள், அதாவது 16 சதவீதமும், நிஃப்டி 3,897.8 புள்ளிகள், அதாவது 14.91 சதவீதமும் இழந்துள்ளன. சென்செக்ஸ் நிறுவனங்களில் ஐடிசி, இன்டர்குளோப் ஏவியேஷன், பவர் கிரிட், பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ், என்டிபிசி ஆகியவை முக்கியமாகச் சரிந்தன. டெக் மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, இன்ஃபோசிஸ் பங்குகள் உயர்ந்தன. அனைத்து பிஎஸ்இ துறைசார் குறியீடுகளும் சரிவுடன் முடிவடைந்தன. மின்சாரத் துறை 3.51 சதவீதம், பயன்பாட்டுச் சேவைகள் 3.38 சதவீதம், உலோகத் துறை 3.34 சதவீதம், ரியல் எஸ்டேட் 3.07 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
பிஎஸ்இ ஸ்மால்கேப் செலக்ட் குறியீடு 2.58 சதவீதமும், மிட்கேப் செலக்ட் குறியீடு 2.53 சதவீதமும் சரிந்தன. மொத்தம் 3,426 பங்குகள் சரிந்தன; 1,003 பங்குகள் உயர்ந்தன; 225 பங்குகள் மாற்றமின்றி இருந்தன. 50 பங்குகளை உள்ளடக்கிய தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீடு 371.25 புள்ளிகள், (1.64 சதவீதம்) வீழ்ச்சியடைந்து, 22,231.80 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது. தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்தச் சரிவு ஏற்பட்டது. வர்த்தகத்தின்போது ஒரு கட்டத்தில் நிஃப்டி 423.15 புள்ளிகள் (1.87 சதவீதம்) சரிந்து, 22,179.90 புள்ளிகளைத் தொட்டது. இது கடந்த 52 வாரங்களில் பதிவான அதன் மிகக் குறைந்த வர்த்தக நிலையாகும்.
ரிசர்வ் வங்கியின் கடுமையான பணவியல் அணுகுமுறை குறித்த எதிர்பார்ப்புகள், தொடர்ந்து வெளியேறும் வெளிநாட்டு முதலீடுகள், அதிகரிக்கும் பத்திர வருவாய் ஆகியவை விற்பனையைத் தீவிரப்படுத்தியதாக நிபுணர்கள் கூறினர். பரவலான விற்பனைக்கு இடையே தகவல் தொழில்நுட்பத் துறை ஒப்பீட்டளவில் தாக்குப்பிடித்ததாக ரெலிகேர் புரோக்கிங் ஆய்வுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர் அஜித் மிஸ்ரா தெரிவித்தார்.