வட்டி அல்லாத வருமானம் குறைந்ததால், ஐடிபிஐ வங்கியின் செப்டம்பர் மாதத்துடன் முடிந்த இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 39 சதவீதம் சரிந்து ரூ.2,205 கோடியாக உள்ளது.
கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கி ரூ.3,627 கோடி லாபம் ஈட்டியிருந்தது. அதில், என்எஸ்டிஎல் பங்கு விற்பனை மூலம் கிடைத்த ஒருமுறை ஆதாயமான ரூ.1,699 கோடியும் அடங்கும். நடப்பு காலாண்டில் மொத்த வருமானம் ரூ.9,594 கோடியிலிருந்து ரூ.9,865 கோடியாக உயர்ந்தது. வட்டி வருமானம் ரூ.7,104 கோடியிலிருந்து ரூ.8,512 கோடியாக அதிகரித்தது. நிகர வட்டி வருமானம் 29 சதவீதம் உயர்ந்து ரூ.4,228 கோடியானது.எனினும், வட்டி அல்லாத வருமானம் 46 சதவீதம் குறைந்து ரூ.1,353 கோடியாகவும், செயல்பாட்டு லாபம் ரூ.2,893 கோடியாகவும் இருந்தது. மொத்த வாராக்கடன் விகிதம் 2.65 சதவீதத்திலிருந்து 2.12 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் விகிதம் 0.21 சதவீதத்திலிருந்து 0.17 சதவீதமாகவும் குறைந்தது.
வங்கியின் மூலதனப் போதுமான விகிதம் 25.39 சதவீதத்திலிருந்து 27.10 சதவீதமாக உயர்ந்தது. வாராக்கடன்களுக்கான ஒதுக்கீட்டு விகிதம் 99.24 சதவீதத்தில் நீடித்தது.
இதனிடையே, வங்கியின் 60.72 சதவீதப் பங்குகளை கனடாவின் ஃபேர்ஃபாக்ஸ் நிறுவனத்துக்கு சுமார் ரூ.53,000 கோடிக்கு விற்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அரசின் 30.48 சதவீதப் பங்குகளும், எல்ஐசியின் 30.24 சதவீதப் பங்குகளும் இதில் அடங்கும். இந்தப் பரிவர்த்தனை நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.