பஜாஜ் ஃபின்செர்வின் மாற்று முதலீட்டுத் தளமான பஜாஜ் ஆல்டர்நேட் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜ்மென்ட், வணிக அலுவலகக் கட்டடத் திட்டங்களில் முதலீடு செய்வதற்கான ரூ.950 கோடி திரட்டியுள்ளதாக தெரிவித்தது.
‘பஜாஜ் ஆல்ட்ஸ் ரியல் எஸ்டேட்–குரோத் ஃபண்ட் 1’ நிதியின் முதற்கட்ட திரட்டல் நிறைவடைந்துள்ளது. கூடுதல் தொகையைத் திரட்டும் வாய்ப்புடன், இறுதியாக ரூ.2,000 கோடி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முதலீட்டுக்குத் தகுதியான பல திட்டங்கள் பரிசீலனையில் இருப்பதாக நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
முன்னணி கட்டுமான நிறுவனங்களுடன் பங்கு மூலதன அடிப்படையிலான கூட்டு முயற்சிகளை உருவாக்கி, முக்கிய நகரங்களில் உயர்தர வணிக அலுவலகக் கட்டடங்களை மேம்படுத்த இந்த நிதி பயன்படுத்தப்படும்.
இந்த முதல் நிதி அறிமுகம், முதலீட்டாளர்களுக்கான பரந்த, பன்முக மாற்று முதலீட்டுத் தளத்தை உருவாக்குவதில் முக்கிய மைல்கல் என்று பஜாஜ் ஆல்ட்ஸ் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான லட்சுமி ஐயர் தெரிவித்தார்.
இந்தியாவில் ரியல் எஸ்டேட் முதலீடுகள் பெரும்பாலும் குடியிருப்புத் திட்டங்களுக்கான கடன் வழங்கல் அல்லது ஏற்கெனவே உள்ள சொத்துகளை வாங்குவதில் கவனம் செலுத்தியதாக நிதியின் தலைவர் சஞ்சித் பாட்டியா கூறினார்.
பங்கு முதலீட்டு அணுகுமுறை, நிறுவனங்கள் மற்றும் உலகளாவிய திறன் மையங்கள் விரும்பும் உயர்தர அலுவலகத் திட்டங்களின் மதிப்பு உயர்வில் முதலீட்டாளர்கள் பங்கேற்க வாய்ப்பளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய நகரங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படும். உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் பெரிய நிறுவனங்களின் அலுவலகத் தேவை, இத்திட்டங்களுக்குச் சாதகமாக இருக்கும் என நிறுவனம் கருதுகிறது.