சென்னை
1980-90-ம் ஆண்டுகளில் இந்தியாவின் முக்கிய நகரங்களில், குறிப்பாக மும்பை, அகமதாபாத், டெல்லி போன்ற நகரங்களில் பங்குச் சந்தை தரகர்களின் அலுவலகங்களிலும், முக்கியமான தெருவின் மூலைகளிலும் கலர் கலராய் கம்பெனிகளின் புதிய வெளியீடுகளின் அப்ளிகேஷன்கள் கொட்டிக் கிடக்கும்.
பங்குச் சந்தையில் ஆர்வமுள்ளவர்கள் அந்த அப்ளிகேஷன்களை அள்ளிச் செல்வார்கள். நீண்ட க்யூவில் நின்று அப்ளிகேஷன்களை சப்மிட் செய்யக் காத்திருப்பார்கள். அலாட்மெண்ட் கிடைத்ததா, இல்லையா என்ற தகவல் வர 15 நாட்கள்கூட காத்திருக்க வேண்டிருக்கும். ரீபண்ட் தொகையும் காசோலையாகத்தான் வரும். ஒரு புதிய வெளியீட்டில் பணம் போட்டால், சுமார் ஒரு மாதம் உங்கள் பணம் ப்ளாக் ஆகிவிடும்.
அலாட்மென்ட் கிடைத்து அந்த கம்பெனி நல்ல முறையில் லிஸ்ட் ஆனால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. அலாட்மென்ட் கிடைக்கவில்லை என்றால் ஒரு மாதத்துக்கு உங்களுக்கு அந்தப் பணத்துக்கு வட்டி நஷ்டம். அப்போது வந்த வெளியீடுகளில் மிகவும் குறிப்பானது, சிறப்பானது இன்போசிஸ் போன்றவை. அலாட்மென்ட் கிடைத்து வைத்திருந்தவர்களுக்கு பல நூறு மடங்கு லாபத்தை தந்திருக்கிறது.
1990-ம் ஆண்டுகளுக்குப் பிறகு செபி வந்தது. பல புதிய கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன. தற்போது புதிய வெளியீடுகளுக்கு ஆன்லைன் மூலமகவே அப்ளை செய்யலாம். நேரடியாக அப்ளிகேஷன் சப்மிட் செய்ய வேண்டும் என்ற காலங்கள் எல்லாம் மலையேறிவிட்டன. உங்கள் பணம் அஸ்பா மூலமாக உங்கள் அக்கவுன்ட்டில் ப்ளாக் செய்யப்படும். அலாட்மென்ட் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் புதிய வெளியீடு முடிந்த அடுத்த நாளே வெளிவந்து விடும்.
அலாட் ஆகியிருந்தால், அந்தப் பங்குகளுக்கு எவ்வளவு பணமோ அவ்வளவு மட்டுமே உங்கள் அக்கவுன்ட்டில் இருந்து எடுக்கப்படும். எனவே, ரீபண்ட் என்ற வார்த்தையே இல்லை. சந்தையில் அந்தப் பங்குகளும் உடனடியாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் லிஸ்ட் செய்யப்படும்.
மேலும், ஒரு கம்பெனியை பங்குச் சந்தையில் பட்டியலிட செபி தற்போது பல கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளது.
முதலீட்டாளர்களுக்கு சாதகமாக எவ்வளவு மாறுதல்கள். இதுபோன்ற சாதகமான மாறுதல்களை செபி கொண்டு வந்திருக்கிறது.
பங்குச் சந்தை மேலும் கீழுமாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த 8 வாரங்களாக சந்தை சரிவிலேயே இருக்கிறது. இதுபோன்ற நேரத்தில் பல புதிய வெளியீடுகள் வந்திருக்கின்றன. 2026-ம் ஆண்டில் இதுவரை 87 புதிய வெளியீடுகள் வந்திருக்கின்றன. அவற்றில் பல வெளியீடுகள் லிஸ்டிங் லாபத்தை தந்திருக்கின்றன. 2026-ம் ஆண்டு ஆவரேஜ் லிஸ்டிங் லாபம் என்று பார்த்தால் 14 சதவீதம். இதுவே கடந்த ஆண்டு 9.3 சதவீதமாக இருந்தது.
இன்றைய புதிய வெளியீடுகள் மூலம் வரும் கம்பெனிகளில் சில / பலதான் வருங்காலத்தில் பங்குச் சந்தையில் பரிணமிக்கபோகும் கம்பெனிகள். ஆதலால், அதுபோன்ற நல்ல கம்பெனிகளைத் தேடிப்பிடித்து, நீண்டகால அடிப்படையில் வாங்குவது உத்தமம். அது உங்கள் போர்ட்போலியோவுக்கு வலு சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.